பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆறுதல்

பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாகக் குறைவடையும்.

எனவே கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கோரிக்கையை முன்வைத்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

2023, மூன்றாம் காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி வேகமானது நேர்மறையாகியுள்ளது. அதற்கமைய 2022 இல் மறை பெறுமானத்துக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2023 இல் சராசரியாக 3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தால் இரண்டாம் கட்ட கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற 337 மில்லியன் டொலர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 220 மில்லியன் டொலர் மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 250 மில்லியன் டொலர் என்பவற்றுடன் தற்போது 4 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி இருப்பைப் பேண முடியும் என்ற இலக்கை அண்மித்துள்ளோம்.

கடந்த ஆண்டு 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 5 வீதத்தை விடவும் குறைவடைந்துள்ளது.

புதிய வரி திருத்தத்துக்கமைய பணவீக்கத்தை 5 சதவீதமாகப் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த ஆண்டு 2857 பில்லியன் ரூபா வருமானம் எமது இலக்காகக் காணப்பட்ட போதிலும், 3110 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

அந்த வகையில் இவ்வருடம் தேசிய உற்பத்தி வருமானம் 11.2 சதவீதமாக அதிகரிக்கும் அதே வேளை, 2026 இல் தேசிய வருமானம் 15 சதவீதம் வரை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019இல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியன் ஆகும். ஆனால் இந்த எண்ணிக்கை 2021இல் 5 லட்சத்து 7000 ஆகவும், 2022இல் 4 லட்சத்து 37500 ஆகவும் வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களின் அடிப்படையில் சுமார் ஒரு மில்லியனால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது.

அந்த வகையில் இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சி வேகத்தை 1.8 – 2 வீதம் வரை அதிகரிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

இந்த இலக்கை அடைவதற்காக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 14 லட்சத்து 10 000 பேருக்கு அஸ்வெசும வழங்கப்படுகிறது. இதனை செலுத்துவதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு, இம்மாத இறுதியில் அல்லது பெப்ரவரியில் இவ்வாண்டுக்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

சரியான நிதி முகாமைத்துவத்தைப் பேணி இலக்கை வெற்றி கொள்ளாமல், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு வேலைத்திட்டங்களையும் மீளப்பெறவோ மாற்றவோ முடியாது.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாகக் குறைவடையும். எனவே இது தொடர்பில் விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கினால் எம்மால் விரைவில் இந்த சுமைகளிலிருந்து மீள முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.