யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்!  வட மாகாண ஆளுநர் சாள்ஸ் வாக்குறுதி

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது.

சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப்படையினரால் பாடசாலைக்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இன்றைய நாள்களில் ஜனாதிபதியின் விஜயத்தில் வடக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட சந்திப்புகளையும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களையும் நடத்தி மக்களின் தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடி வருகிறார்.

அத்தகைய விடயங்களில்  மக்களின் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரைகளையும் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கைகளை பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் பிரதியை தனக்கும் அனுப்பிவைக்குமாறும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

1818 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம், அசாதாரண நிலைமையின் காரணமாக 1990 ஜூலை 16 ஆம் திகதி பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.

சுமார் 28 வருடங்களின் பின்னர், 2018 செப்ரெம்பர் 06ஆம் திகதி இந்த பாடசாலை மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.