தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி 27, 28 இல்; நடைபெறும்! அடித்துக்கூறுகிறார் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி எதிர்வரும் 27,28 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.

இதேநேரம், கட்சித்தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும், கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பின்போது, சம்பிரதாயத்துக்கு அமைவாக போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெற வேண்டுமென சம்பந்தனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின்போது பாரபட்சம் காண்பிக்கப்பட்டுள்ளமையால் அனைத்து தெரிவுகளும் மீள நடத்தப்பட வேண்டுமென அம்மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவாகளான பத்துப்பேரின் கையொப்பத்துடன் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்று அக்கடிதத்தினை அனுப்பிய அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்ற கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 2023ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட தீர்மானப்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28 ஆம் நாள்களில் திருகோணமலை உப்புவெளி ஜேகப் பீச் றிசோட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் தலைமையில் நடைபெறும் மேற்படி மாநாட்டுக் கூட்டம் மு.ப.10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது என்றுள்ளது.

இதேவேளை, சம்பந்தனுக்கும், சிறீதரனுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவு நடைபெற வேண்டியதோடு சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதேபோன்ற நிலைமை தொடர வேண்டும். நாம் தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும். கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் கிளைத்தெரிவின்போது பாரபட்சமான நிலைமைகள் இடம்பெற்றுள்ளதை முழுமையாக வெளிப்படுத்தி மாவட்டக்கிளைத் தெரிவு மீண்டும் புதிதாக நடத்தப்பட வேண்டும் என்றும், அந்தத் தெரிவு சுயாதீன குழுவின் முன்னால் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கட்சியின் பத்து சிரேஷ்ட அங்கத்தவர்கள் மாவை சோ.சேனாதிராஜாவுக்கும், பதில் பொதுச்செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதம் சம்பந்தமாக இதுவரையில் எவ்விதமான பதில்களும் வழங்கப்படவில்லை என்று அந்த உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.