பொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசு சந்தைக்கு சென்று ஆராய வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  கோரிக்கை

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

அரசாங்கம் வற்வரியை நூற்றுக்கு 18 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு முறையாக பதில் தெரிவிக்காமல் இருக்கிறது.

ஏனெனில் வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்த மதிப்பீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம் செய்திருக்கிறது.

வற்வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வற்வரி உயர்வால் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் வற்வரி அதிகரிக்கப்பட்டபோது பொருள்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.

அதனால் சீனி,பருப்பு,மிளகாய்,கீரி சம்பா,சம்பா போன்றவற்றின் விலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை சந்தைக்குச் சென்று ஆராய்ந்து பார்க்குமாறு  கேட்டுக்கொள்கிறேன். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.