உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையினால் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானோர் கடனாளிகள் எம்.உதயகுமார் சுட்டிக்காட்டு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 22.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில்  பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நம்பி வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.

வாழ்க்கைச்செலவு அதிகரித்து மக்கள் தள்ளாடி வருகின்றனர். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம்  நாட்டில் 30 லட்சத்து 29 ஆயிரத்து 300 குடும்பங்கள் கடனாளி ஆகியுள்ளன.

அதில் 6 லட்சத்தி 97 ஆயிரத்து 300 குடும்பங்கள் தங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே கடன் பெற்றுள்ளார்கள். இது பாரதூரமான விடயமாகும்.

அத்துடன் வாங்கிய கடனை மீள செலுத்துவதற்காக 3 லட்சம் குடும்பங்கள் மீண்டும்  கடன்பெற்றுள்ளன எனக் குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 9 லட்சத்து 70ஆயிரம் குடும்பங்கள் அடைமான முறையில் கடன்பெற்றுள்ளார்கள். வங்கிகளில் 97 ஆயிரம் குடும்பங்களும் நிதி நிறுவனங்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 500 குடும்பங்களும்  பண தரகர்களிடமிருந்து 3 லட்சத்து 3500 குடும்பங்களும்  கடன் பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 22.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் நகர் புறங்களில் சுமார் 24.3 சதவீதமானவர்கள் கடனாளியாகி உள்ள நிலையில்  பெருந்தோட்டங்களில் அது 42.3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர்.

பெருந்தோhட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமையே இதற்குக் காரணமாகும். அத்துடன் கடனாளியாகி உள்ளது மாத்திரமல்லாது பெருந்தோட்டங்களில் மந்தபோசணை, வறுமை, போஷாக்கின்மை என்பன அதிகரித்து காணப்படுகின்றன. நாட்டுக்காக உழைத்த மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று கடனாளியாக மாறியுள்ளார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.