தனியார் பல்கலை மாணவர்களுக்கான வட்டியில்லா கடனை மீளப்பெற்றுக்கொடுக்க விரைவில் ஏற்பாடு!  சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

உயர் கல்வியைத் தொடர்வதற்கு தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில்லாத கடன் வழங்கும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனை மீள பெற்றுக்கொடுக்க திறைசேரியுடன் விரைவில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம் என  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகையில் –

நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த உயர்தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை எதிர்க்கட்சியின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய மீண்டும் நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

என்றாலும் ஹொரிஸன் மற்றும் கட்சு சர்வதேச பல்கலைக்கழக  கல்வி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,200 மாணவர்கள்  இந்த வட்டியில்லா கடனாக ரூபா 8 லட்சத்தை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த வட்டியில்லாக் கடனைப் பெற்ற சில மாணவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதைக் கருத்திற் கொண்டு,இந்த மாணவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பது நியாயமற்ற செயல். இது தொடர்பில் அரசாங்கம் தலையிடவேண்டும். – என்றார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

அரசாங்க பல்கலைக்கழகங்கள் அல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்குவதை அரச வங்கிகள் இடைநிறுத்தி இருந்தன. இந்த திட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதியே ஆரம்பித்து வைத்தார். அந்தத் திட்டத்தில் ஆறாவது குழு வரை நாம் தொடர்ந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கடுத்த ஏழாவது குழுவுக்கு அந்த வட்டியற்ற கடனை வழங்குவது தொடர்பில் அரசாங்க வங்கிகள் பின்னடைவைக் காட்டின.

அதனையடுத்து அந்தக் கடனை வழங்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் நாம் பேச்சு நடத்தி மீண்டும் ஐயாயிரம் ரூபாவாக அந்தக் கடனைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இதற்கு முன்னர் முதலாவது இரண்டாவது தடவையாக கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தவிர்த்து வந்ததன் காரணமாகவே அந்த வங்கிகள் அதிருப்தியை வெளியிட்டன.

எனினும் அதனை வைத்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியாது. வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டார் என்பதால் அடுத்து வரும் வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பதை நிறுத்த முடியாது. அவ்வாறு செய்தால் அது வங்கி சம்பிரதாயத்திற்கும் முரணானதாகவே அமையும்.

எவ்வாறெனினும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதனை பெற்றுக் கொடுக்கும் வகையில் நாம் பேச்சு நடத்தத் தயாராகி வருகின்றோம். அந்த வகையில் கல்வி அமைச்சு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் திறைசேரியுடன் இணைந்து பேச்சு நடத்தி இதற்கு சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.