மத்தியகுழுவைக்கூட்ட தமிழரசுக்கட்சி தலைவர் முடிவு: அரசியல்குழு உறுப்பினர்கள் சிலர் விரும்பவில்லையாம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சோ.சேனாதிராசா முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த கூட்டத்தை வவுனியாவில் நடத்துவதற்கு அவர் எதிர்பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், கூட்டத்தை அழைப்பதற்கான காரணம் மற்றும் காலம், நேரம் என்பன பற்றி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி பொதுச்சபை கூட்டப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக மத்திய குழுவைக் கூட்ட வேண்டுமென்று மாவை சோ.சேனாதிராஜா உறுதியாக உள்ளார்.

இவ்வாறு மத்திய குழு கூட்டப்படும்போது தலைமைத்தெரிவு உட்பட பல விடயங்கள் தொடர்பில் மீண்டும் சர்ச்சைகள் எழலாம் என்பதால் அவசரமாக மத்திய குழுவைக் கூட்டவேண்டிய அவசியமில்லை என்று அரசியல் குழுவில் சில உறுப்பினர்கள் விருப்பம் வெளியிடவில்லை.

இதேவேளை, திருகோணமலை மாவட்டக்கிளை சம்பந்தமாக சம்பந்தன் அறுவரின் பெயர்களைப் பரிந்துரைப்பதற்கு அரசியல்குழு அனுமதித்துள்ள நிலையில், தம்மீது பாரபட்சம் காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டு தலைமைக்கு கடிதம் அனுப்பிய தரப்பினர் அரசியல் குழுவின் முடிவை முழுமையாக ஏற்பதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் சம்பந்தமாக மீண்டும் சம்பந்தனுடனும், தலைவர் மாவை, பதில்பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கு முயற்சிகளை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.