நவீன சர்வதேசக் கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லை! 3 ஆவது தென்துருவ மாநாட்டில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை ஜி77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்துருவ மாநாட்டில் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை எனவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கே இதனால் அநீதி இழைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

பெரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால்  உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில் ஆதிக்கம்  செலுத்தும் உலகிற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி உகந்தது என்றும்  ஜனாதிபதி   சுட்டிக்காட்டினார்.

இன்று, உலகளாவிய கடன் மற்றும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் கடன், பெரிஸ் கிளப்பில் அங்கத்துவர் அல்லாத  கடன் வழங்குநர்கள் மற்றும்  சர்வதேச பிணைமுறிச் சந்தை ஆகிய தரப்புக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும்  ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள நிதி வளங்களை கடன் சேவையாகப் பெற்றுக்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அத்தியாவசியமான பொது சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான செலவுகளுக்கு நிதி வசதிகளை வழங்க முடியாமல் போவதுடன், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உகண்டாவின் கம்பாலா நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான 77  மற்றும் சீனா  3  ஆவது தென்துருவ நாடுகளின் உச்சி மாநாட்டில்  உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் வளர்ந்து வரும்  நாடுகளின் மிகப்பெரிய கூட்டணியாக, ஜி77 ஆனது உலகளாவிய தென்துருவ நாடுகளுக்கு தமது கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும், நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் சர்வதேச பொருளாதார பிரச்சினைகளை கூட்டாக ஆராய்வதற்கும்  வாய்ப்பு வழங்குகிறது.

வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அதன் 134 உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அதன் 3 ஆவது தென்துருவ நாடுகளின் மாநாடு ‘யாரையும் கைவிட மாட்டோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கூட்டப்பட்டது.

ஜி77 மற்றும் சீன  மாநாட்டின் தலைமைப் பதவியை முன்பு கியூபா வகித்ததோடு இம்முறை அது உகாண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மாநாட்டில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழு உரை வருமாறு: –

3 ஆவது தென்துருவ  நாடுகளின் மாநாட்டை நடத்தி, ‘ஜி77 மற்றும் சீனா’ குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள  உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கும் உகாண்டா அரசாங்கத்திற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

மேலும்,   கடந்த ஆண்டில் ‘ஜி77 மற்றும் சீனா’ குழுவிற்கு வழங்கப்பட்ட பயனுள்ள மற்றும் உறுதியான தலைமைக்கு கியூபாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

‘தற்போதைய வளர்ச்சிக்கான சவால்கள்’ என்ற தலைப்பில் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெலினால் 2023 செப்ரெம்பரில் ஹவானாவில் கூட்டப்பட்ட  அரச தலைவர்கள் மாநாட்டில்  பங்கேற்கவும் ஹவானா பிரகடனத்தை நிறைவேற்றவும் பங்களிக்க முடிந்தமை குறித்து  நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜி77 மற்றும் சீனா  குழு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதும் , நாம் எதிர்கொள்ளும் பல சவால்களை சமாளிக்க உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது. ஜி77 மற்றும் சீனாவின் ஸ்தாபகக் கொள்கைகளான ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் தடைகளின்  நிலையான குறைப்பு என்பன  நாம் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய உறுதியான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

இன்று உலகம் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் வேளையில் நாம் இங்கு சந்திக்கிறோம். மோதல்களின் அதிகரிப்பு, தொற்றுநோய்களின் விளைவுகள், காலநிலை தொடர்பான இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பலவற்றால் இந்த நிலைமைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும்  இந்த நிலைமைகள், ஜி77 உறுப்பு நாடுகளின் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களில்    சமமற்றதாகவும் பாதகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், உலக நிதிக் கட்டமைப்பை முன்னெப்போதையும் விட இப்போது மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளது. பெரிஸ் கிளப் மற்றும் லண்டன் கிளப் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகத்திற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி மிகவும் பொருத்தமானது. இன்று, உலகளாவிய கடன், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் கடன், பெரிஸ் கிளப் மற்றும் சர்வதேச பிணைமுறிச் சந்தையால்  கட்டுப்படுத்தப்படுகிறது.

கையிருப்பிலிருக்கும் நிதி வளங்களை கடன் சேவைகளாகப் பெற்றுக்கொள்ளும் போது  பொதுத் தேவைகள், மனித அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குத் தேவையான செலவுகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இதனால் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இந்த விடயம் தாக்கம் செலுத்துகிறது.  தற்போது காணப்படும் பொது வரைவு விரைவில் கடன் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு போதுமானதாக இல்லை. மேற்படி வரைவு மற்றும் நடைமுறையில் காணப்படும் பொருத்தமற்ற தன்மைகள் காரணமாக இலங்கை உள்ளடங்களாக நமது நாடுகள் அனைத்தும் அரச கடன் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளைத் தாமதிக்க வேண்டியுள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் அவற்றுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைதலுக்காக தென் துருவ நாடுகளின் தேவைகளைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் உலக நிதிக் கட்டமைப்பில் பாரிய தோல்விகளைக் காணக்கூடியதாக உள்ளது.  காலநிலை நிதி ஒத்துழைப்புக்கள் தொடர்பில் பல்வேறு உலக கலந்துரையாடல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை தற்போது வரையில் ஏற்படவில்லை.

டுபாய் மாநாட்டில் காலநிலை வெப்ப வலய முன்மொழிவைச் சமர்பித்தோம். அரச நிதியளித்தல் செயற்பாடுகளின் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் எமது கடல் மற்றும் வன, வளங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பொது வளங்களை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அந்த முன்மொழிவு சமர்பிக்கப்பட்டது.

இன்றளவில் உலக வர்த்தக ஒழுங்குபடுத்தலுக்குள் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் வளங்களின் அளவு குறைவதுடன் சுற்றாடல் பாதிப்பை மட்டுப்படுத்துதல், பாதிப்புக்களை தவிர்த்தல்  போன்ற பாதுகாப்பான எண்ணக்கருக்களுடன் கூடிய எழுச்சியைக் காண முடிகிறது.

உலக வர்த்தக கட்டமைப்புக்குள் ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் நிகழக்கூடாது.  அவ்வாறான தீர்மானங்களை ஒன்று அல்லது இரண்டு தலைநகரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக மேற்கொள்வதை விடுத்து பலதரப்பு கலந்துரையாடல் ஊடாகவே செய்ய வேண்டும்.

நாம் உலக பொருளாதாரம் மற்றும் முதலீடுகளின் இலகுத் தன்மை, உயர்ந்தபட்ச செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். ஜி77 அமைப்பு இந்த செயற்பாடுகளை பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றுமொரு நெருக்கடியாக அமைந்திருக்கிறது.  ‘தொழில்நுட்ப மாற்றம், உற்பத்தி திறன் ஆகியன, மூலதனத்தை மிகவும் தீவிரமாக்கியுள்ளதுடன் குறைந்தபட்ச உழைப்பையை எதிர்பார்க்கிறது’ என்ற ஜோசப் ஸ்டிக்லிடிஸின் கருத்து அதனை சரியாக விளக்குகிறது.

அதற்காக உலக நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்பை வலியுறுத்தும் அதேநேரம்,  ஜி77 மற்றும் சீனா உள்ளிட்ட குழுக்கள் எமது அங்கத்துவ நாடுகளுக்கு,  வலுசக்தி மற்றும் டிஜிற்றல் பரிமாற்றம்,  பசுமை பொருளாதாரம் மற்றும் புதிய உலக பொருளாதாரத்திற்காக பயிற்றுவிக்கப்பட்ட தொழில் படையைத் தயார்ப்படுத்த வேண்டும்.

இலங்கை, ஜி77 மற்றும் சீனா உள்ளிட்ட குழுக்கள் இணைந்து, நீதியானதும், சட்டத்திற்கு மதிப்பளிப்பதும், சமத்துவமானதுமான உலகிற்கான நோக்கை அடைந்துகொள்ளவும் பல தரப்பு கூட்டுத் தேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய தலைமைத்துவத்தை ஏற்றுகொண்டிருக்கும் யொவேரி முசேவேனியின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எனது உத்தியோபூர்வ விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளித்த சிநேகபூர்வமான வரவேற்புக்கு நன்றி கூறி எனது உரையை நிறைவு  செய்கிறேன்.- என்று ஜனாதிபதி தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.