வடக்கு, கிழக்கில் பாரியளவில் காணிகள் ஓரிரு மாதங்களுக்குள் விடுக்கப்படுமாம்! இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் எதிர்பார்ப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஹெக்டேயர்களுக்கும் மேற்பட்ட காணிகள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது 60 வீத இலாபம் கிடைக்கப்பெறுகிறது. ஆனாலும் சில இடைத்தரகர்களால் அதில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இளைஞர், யுவதிகளின் வெளியேற்றத்தைத் தவிர்ப்பதற்காக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களம் வசப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பதற்கு அதாவது அடர்ந்த காடுகளாக இல்லாத காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 85 சதவீதம் சாதகமான நிலைமையிலேயே உள்ளது. எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் அவை விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு எமக்கு ஆளணி தேவைப்படும். எனவே விவசாயம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர், யுவதிகளைக் கவர்வதற்கு முயற்சிக்கின்றோம்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி வடக்கு மற்றும் கிழக்கிற்கு விஜயம் செய்த போது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, பிரதேச ஒருங்கிணைப்பு குழு என்பவற்றின் ஊடாக காணி விடுவிப்பிற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அந்த பகுதிகளில் விவசாயக்காணிகள் இன்றியும் தோட்டக்காணிகள் இன்றியும் பல இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேயர் காணிகளும் வவுனியாவில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேயர் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.