ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக! வடிவேல் சுரேஷ் கோரிக்கை

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு வழங்க வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வெற்றிடங்கள் பரவலாகக் காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் ஊடாக 3,000 உதவி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்த போதிலும் தற்சமயம் உதவி ஆசிரியர்களாக சேவை புரிபவர்களின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைத்த பின்னரே புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு பொறிமுறை ஒன்றினூடாகவே இந்த நியமனங்களும் வழங்கப்பட வேண்டும். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.