வீடுகளின் உரிமையை மாற்றும் போது பயனாளி இறந்தால் முழு உரிமை வீட்டில் வசிக்கும் வாரிசுகளுக்கு மாத்திரமே! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில், வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் போது வீட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய நொத்தாரிசு கட்டணம், முத்திரைக் கட்டணம் மற்றும் பிற வரிகளுக்கு செலவிடப்படும் தொகை திறைசேரியால் ஏற்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்த வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், அந்த வீட்டில் தற்போது வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே வீடுகளின் முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காகவே இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

பல்வேறு நகர திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளில் இருந்து மாதந்தோறும் ரூ.3000 வசூலிக்கப்படுகிறது. வாடகைப் பணம் வசூலிப்பதை முற்றாக நிறுத்துவதற்கு இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுமார் 70 வீதமான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைப்பத்திரங்களை சட்டரீதியாக வழங்கி காணி மற்றும் வீடுகளின் வாரிசுகளாக்குவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நகர வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வாடகை அடிப்படையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை வசூலை இடைநிறுத்தி, அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை சட்டபூர்வமாக ஒப்படைத்தலாகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்ட நிலைகள் தொடர்பில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுப் பத்திரங்களை வழங்குவது தொடர்பாக,  சட்டமா அதிபருடன் ஏற்கனவே கலந்துரையாடி தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு சட்டபூர்வ உறுதிப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர், குடியிருப்பாளர்களின் பிரதிநிதித்துவத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனத்தால் இந்த வீடுகளின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவைப் பத்திரம் மேலும் தெரிவிக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.