20 அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு பத்திரம்! நளின் பெர்னாண்டோ தகவல்

பால்மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட 20 அத்தியாவசியப் பொருள்களின் தேவை அல்லது குறைபாடு தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான  கேள்வி நேரத்தில் புத்திக பத்திரன எம்.பி. எழுப்பிய கேள்விக்குப்  பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டிற்கு பால்மா இறக்குமதி செய்யும் போது சுகாதார அமைச்சு மற்றும் தர நிர்ணய சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பால் மாவின் தரம் தொடர்பில் இதுவரை அளவீடு ஒன்று நடைமுறையில் இல்லாமல் இருந்தது.  நான் வர்த்தக அமைச்சராக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை சமர்ப்பித்து இறக்குமதி செய்யும் பால் மாவில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நடவடிக்கை எடுத்தேன்.

அந்த நிறுவனம் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த மாதமளவில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அதன் மூலம் இனி இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் நாம் உறுதிப்பாடு வழங்க முடியும் .

பால்மா மட்டுமல்ல நாட்டில் 20 அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பில் நான் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளேன். அந்த வகையில் பால் மா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் போன்ற நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எமது நாட்டின் உற்பத்தி மேலதிகமாக காணப்படுகின்றதா? அல்லது நாட்டின் தேவைக்குக் குறைவாகக் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் எம்மிடம் உள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நாம் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளோம்.

விவசாய அமைச்சின் தரவுகளுக்கு அமைவாக நாம் அதனை தயாரித்துள்ளோம். அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களுடனும் அது தொடர்பில் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.

குறிப்பாக நாம் பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளோம். அத்துடன் தேசிய பால் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பால்மா இறக்குமதியை குறைக்கும் வகையிலேயே அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.