மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் வடக்கு மாகாணத்தில் அமையுமாம்! அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சு இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘உள்நாட்டு ரின்மீன் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு ரின்மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கும் அண்மையில் தீர்மானித்திருந்தோம்.

வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனா உட்பட பல்வேறு நாடுகளிடமிருந்து புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் இது தொடர்பில் விசேட பேச்சு முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் வடக்கில் மாத்திரமின்றி மீனவர்கள் வாழும் சகல மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும்.

நாடுகளுக்கிடையிலான உறவுகளில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையிலேயே இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை அணுகுகின்றோம்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரதான பிரச்சினை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.

இவ்விடயத்தில் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடற்படைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது’ என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.