எந்தத் தரப்பும் ஏகபோகம் காட்டக்கூடாது சிறிதரனின் அழைப்புக்கு சித்தர் நிபந்தனை!

இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும், ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு, எந்தவொரு தரப்பினரும் ஏகபோகத்தை செய்யாதவகையில் அங்கீகரம் பெற்ற அரசியல் கூட்டொன்றையும், பொதுச்சின்னத்தையும் ஏற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும்.

புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு சிறிதரனின் அழைப்புக்கு நிபந்தனை விதித்துள்ளார்.

வெர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, ஒரேகொள்கையில் பயணிக்கின்ற தரப்பினர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

எம்மைப்பொறுத்தவரையில் நாம், ஐக்கியத்தினை ஒருபோதும் எதிர்த்த தரப்பினர் கிடையாது. ஆனால் அவ்வாறு ஐக்கியப் படுகின்ற போது கடந்த காலத்தில் நிகழ்ந்தேறிய சில முக்கிய விடயங்களை கவனத்தில் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம்.

முதலாவதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியே கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தனித்துப்போட்டியிடுவதாகக் கூறி வெளியேறியது.

அதன்பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சிய தரப்பாக நாமும், ரெலோவும் இருந்ததோடு ஏனைய தரப்பினரையும் கூட்டமைப்புக்குள் இணைத்து செயற்படுவதற்குத் தீர்மானித்தோம்.

அதனடிப்படையில், தேர்தல் விடயங்களை கையாள்வதற்காக நாம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்கின்ற பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியையும், அதன் சின்னத்தையும் பொதுவானதாகப் பேணிவருகின்றோம்.

அந்த வகையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும், ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு, எந்தவொரு தரப்பினரும் ஏகபோகத்தை செய்யாதவகையில் அங்கீகரம் பெற்ற அரசியல் கூட்டொன்றையும், பொதுச்சின்னத்தையும் ஏற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும்.

இந்த விடயத்தில் இணக்கப்பாடுகளை எட்டுகின்றபோது, தமிழரசுக்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற கூட்டு அர்த்தமுள்ளதாக அமையும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.