புதிய மாற்றத்திற்குள்ளாக்கும் அரசியல் இயக்கம் அவசியம்! என்கிறார் அநுர குமார

வெறுமனே ஆட்சி மாற்றத்தால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடத்தப்பட்ட  மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படைக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் அநுரகுமார தெரிவித்த கருத்துக்கள் வருமாறு –

அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அண்மித்திராத நிலையில் அரசியல் இவ்விதமாக சூடுபிடித்தமை இலங்கையில் ஒருபோதுமே நிலவவில்லை. அண்மைக்காலமாக இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக மிகவும் அதிகமாக விழிப்படைந்து வருகிறார்கள். விழிப்புணர்வடைந்த அரசியல் முனைப்புநிலையை அடைந்துவருகிறார்கள்.

இந்த வருடத்தின் ஒக்ரோபர் மாதம் இறுதியளவில் எமது நாட்டில் இருப்பது புதிய அரசாங்கமாகும், புதிய ஆட்சியாகும். அந்த புதிய அரசாங்கத்தை, புதிய ஆட்சியை தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாற்றிக்கொள்ள நாமனைவரும் முனைப்பாகப் பங்களித்துள்ளோம்.

எமது நாடு பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் தமது உயிர் உள்ளிட்ட அனைத்தையுமே அர்ப்பணித்து யுத்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவந்தாலும் அன்று நீங்கள் எதிர்பார்த்த  சாதகமான நாடொன்றில் நன்றாக வசிக்கின்ற மக்கள் பற்றிய எதிர்பார்ப்பு முழுமையகவே சிதைக்கப்பட்டுவிட்டது.

யுத்தம் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் சீர்குலைந்த, உயிர்வாழ்வது மிகவும் கடினமான மற்றும் உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்குள்ளான  நாடாக விளங்குகின்றது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டியது எம்மால் கைவிடமுடியாத பொறுப்பாகும்.

இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில விடயங்களுக்குள் முடக்கிவிட ஒருசிலர் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதாரரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளமை உண்மைதான்.

மக்களின் அத்தியாவசிய பண்டங்கள்மீது வரிவிதிக்கப்படுவது, தொழிலொன்றைத் தேடிக்கொள்ள இயலாது, கிடைக்கின்ற சம்பளத்தில் சீவிப்பது சிரமமானது. நாட்டைவிட்டுச் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையடைந்து உள்ளதென்பது போன்ற விடயங்கள் உண்மையே. எனினும் மறுபுறத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, குற்றச்செயல்கள் மலிந்துள்ளன.

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெலிகம பொலீஸ் ஆளுகைப் பிரிவுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தர்கள். அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் மீது வெலிகம பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்து மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இறுதியில் கொழும்பு பொலீஸாரும் வெலிகம பொலீஸாரும் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டார்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரன்போல் வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியவேளையில் நிறுத்தாமையால் நாரம்மல சாரதியை சுட்டுக்கொன்றார்கள். மதியபோசனம் உண்டுகொண்டிருந்த பிக்குவை  சுட்டுக்கொன்றார்கள். பெலியத்தையில் ஐவரைக் கொலைசெய்தவர்கள் யாரென இன்னமும் தெரியாது.

அனைவரதும் உயிர்கள் பாதுகாப்பற்ற அராஜகநிலை உருவாகி உள்ளது. 1993 காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டு ஜனாதிபதி பிரேமதாஸவின் படுகொலைக்குப் பின்னர் சற்று தணிந்தது. உங்களதும் எனதும் எம்மனைவரதும் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொருளாதாரம் சீரழிந்தது மாத்திரமல்ல மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பற்ற நிலைமையின்பேரில் ஆட்சிக்குவர சிலவேளைகளில் திட்டமிடுவதாகவும் இருக்கக்கூடும்.

இது அதிகாரத்திற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடலாகாது. எந்தவொரு பிரஜைக்கும் அரசாங்க அலுவலகமொன்றில் இருந்து பணிகளை மேற்கொள்ளமுடியாத சீரழிந்த அரச சேவையே காணப்படுகின்றது.

பொலீஸ் மா அதிபரொருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் பதிற்கடமையாற்றுவதற்காக நியமித்தவருக்கு கரட், கிழங்கினைக் காட்டிக்காட்டி தமக்குத் தேவையாக நடவடிக்கைகளை ஈடேற்றிக்கொள்கிறார்கள்.  நீதி பரிபாலனம் தொடர்பில் சந்தேகம் குவிந்துள்ளது. குற்றச்செயல் புரிபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் ஒன்றுசேர்ந்த குடும்பங்களின் அருவருப்பான, அழுகிப்போன அரசியலே நிலவுகின்றது.

இரும்பு மூடைக்கே கரையான் அரித்துவிட்டால் ஏனையவை பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை.  உலகின் ஒருசில நாடுகளில் பொருளாதாரம் சீரழிந்தாலும் ஏனைய முறைமைகள் வழமைபோல் நிலவும்.

எமது நாட்டில் சீரழிந்த இந்த முறைமைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றை  நிலைநாட்டுவதை விடுத்து ஆட்சிமாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றம் பயன்தர மாட்டாது. மனிதர்கள் சிந்திக்கின்றவிதத்தைக்கூட  மாற்றியமைக்கத்தக்க முறைமையொன்று தேவை.

இந்த சமூகத்துடன் எம்மால் முன்நோக்கி நகர முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற அரசியலொன்று தேவை. அண்மைக்காலமாக பல வாய்ப்புகள் உருவாகியபோதிலும் நாட்டை மேம்படுத்துகின்ற நோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.

மேலைத்தேய ஆதிக்கத்திற்கு 133 வருடங்கள்  அகப்பட்டிருந்த ஒரு நாடு சுதேசிகளின் கைகளுக்கு கிடைத்ததும் வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாகாத அளவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப எந்தளவு ஆழமான உணர்வு ஏற்படவேண்டும்? எம்மிடம் உருவாகாத இந்த நோக்கு இந்தியாவின் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசிய இயக்தைச்சேர்ந்த தலைவர்களிடம் இருந்தது.

இந்த நோக்கு இன்று சந்திரனுக்குப் போகின்ற ஓர் இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது.  தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பெண் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் எனும் கொடியின்கீழ் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை நாடற்ற நிலைமைக்கு மாற்றியதும் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க செல்வநாயகம் முன்வந்தார். 1956 இல் இருந்து மொழிப் பிரச்சினையொன்றை இழுத்துப்போட்டுக் கொண்டதால் 58 அளவில் சிங்கள – தமிழ் கலவரம் உருவாகியது.

ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத் தொடங்கினார்கள். 1970 நடுப்பகுதியில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று உருவாகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது.

எமது ஆட்சியாளர்கள் உருவாக்கியது முரண்பாட்டு வரலாறாக அமைந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியதோ ஒருமைப்பாட்டினையாகும். தேசம் ஒன்றாக எழுச்சிபெறுகின்ற வரலாற்றினை அவர்கள் எழுதும்போது முரண்பாடுநிறைந்த வரலாற்றினை எழுதவேண்டியநிலை எமக்கு ஏற்படுகின்றது.

உலக நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கையில் நாங்கள் அந்த நூற்றாண்டினைக் கைவிட்டுவிடுகிறோம். உலகில் உருவாகியுள்ள நவீனத்துவத்திற்கு ஒத்திசைவு செய்யத்தக்க இலங்கையொன்று எமக்குத் தேவை.

எனவே எம்மெதிரில் இருப்பது வெறுமனே ஆட்சிமாற்றத்திற்குப் பதிலாக புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டுசெல்கின்ற புதிய ஆட்சியாகும். அதற்காக நாட்டை மீண்டும் விழித்தெழச் செய்வித்து தேசத்தை ஒருமைப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

நாங்கள் வடக்கு மக்களை அழைக்கவேண்டியது 13 ஐ தருகிறோம் என்றல்ல் பெடரல் தருகிறோம் என்றல்ல.  இந்த அனர்த்தத்தில் இருந்து விடுபடுவதற்காக  நாங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றே கூறவேண்டும். கப்பம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற கலாசாரத்திற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகத்துடன் ஒன்றுசேருங்கள் எனக்கூறி அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் அதிகாரத்தை எடுப்பதென்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பமேயன்றி இறுதிக்கட்டமல்ல. எமக்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய அனைத்துச் சக்திகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. திடீர் விபத்து காரணமாக ஒருவர் இறந்தாலும் என்பிபி ஐ பிடித்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் அந்த அளவுக்கு திகைப்படைந்துள்ளார்கள். அவர்களின் அசிங்கமான, காடைத்தனமான, கீழ்த்தரமான அரசியலை சதாகாலமும் முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று அவர்கள் நினைத்தார்கள்.  பல தசாப்தங்களாக அவர்களின் குற்றச்செயல்களையும், ஊழல்களையும் வெளியில் வர இடமளிக்காமல் பிரதான ஊடகங்களில் தணிக்கை செய்திருந்தார்கள்.

இப்போது சமூகவலைத்தலங்களை தடைசெய்யப்போகின்ற ஐயாமார்களுக்கு நாங்கள் கூறுவது ‘ இப்போது குதிரை தப்பியோடிவிட்டது,  லாயத்தை மூடுவதில் பலனில்லை’ என்றாகும். இப்போது அவதூறு,  அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களை முன்வைத்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது  அவதூறு,  அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு கட்டுப்படுவதற்காக அல்லவென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பலதசாப்தங்களாக பெரிகோட்டின் இருபுறத்திலும் வைத்திருந்த பாதுகாப்புப் பிரிவின் இளைப்பாறியவர்களும் நாங்கள் அனைவரும் இந்த பக்கத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். பெரிகோட்டின் அந்தப் பக்கத்தில் அவர்கள் தனித்துப்போய் இருக்கிறார்கள்.

ஜெனரல்மார்கள், அட்மிஜரால்மார்கள்,  எயார் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இப்படி ஒன்றாக இருந்தாலும் அவர்கள் சதாகாலமும் அவர்களின் பைக்குள்ளே அனைவரையும் வைத்துக்கொள்ளவே நினைத்தார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைக்கண்டு அச்சமடைந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமானவற்றை அமைத்திட முயற்சிசெய்கிறார்கள்.

ஆனால் நாங்கள் எப்போதுமே கூறுவதைப்போல் கொப்பி பண்ணமுடியும், ஆனால் இணையானதாக்கிட முடியாது. இந்த ஒவ்வொருவரும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நாட்டை எதிர்பார்த்து வந்தவர்களேயன்றி அவர்களிடம் தனிப்பட்ட தேவைகள் கிடையாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உளவுத்துறைப் பிரதானி போன்றவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் பதற்றமடையவில்லை.

தம்மை இந்த பேரழிவிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மீது மக்களுக்கு இருகின்றது. கலவரமடைந்து, பொய்க்கிடங்குகளில் விழுந்து அந்த மக்களின்  எதிர்பார்ப்பினை நாங்கள் சிதைக்கப்போவதில்லை.

புயலில் சிக்கியுள்ள இந்த படகினை மிகச்சிறந்த தந்திரோபாயத்தை தெரிவுசெய்து வெற்றியை நோக்கி வழிப்படுத்துவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட பிசகக்கூடாது. ஐ.ரீ.என் தலைவர்  சுதர்ஷன குணவர்தன ‘சமபிம’ என பாரிய லிபரலுக்காக தோற்றியவர்கள்  அவற்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள்.

நடவடிக்கைகளை மேற்கொண்டதும் வெற்று ஆசாமிகள். அதனால் ஒருசொல்கூட பிசகுவதற்கு எமக்கு உரிமை கிடையாது.  நாங்கள் எந்நேரத்திலும்  மனதால் அல்லது மூளையால் முடிவுகளை எடுக்கவேண்டும்.  அதனால் நாங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக அசிங்கமான, அழுகிப்போன, துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை சுத்தஞ்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திடவேண்டும்.  அனைத்து அதிகாரங்களும் ஒரே வளையத்தின் கைகளிலேயே இருக்கின்றன. அவையனைத்தையும் மாற்றியமைத்து பொருளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும்.

எமது கல்வியை பாரிய மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவுவேளையொன்றை  வழங்குவதற்கான வழிமுறையை உறுதிப்படுத்திட வேண்டும். நாங்கள் தொடக்கத்திலேயே பிரஜைகளுக்கு உணவு, சுகாதாரம், கல்விக்கு உத்தரவாதம் அளிப்போம்.

நெருக்கடியை முகாமை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. எமது ஆட்சியின்கீழ் நெருக்கடியை முகாமைசெய்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க புதிய அணுகுமுறைக்குள் நாட்டைக் கொண்டுசெல்வோம்.  குற்றச்செயல்களிலிருந்தும்  போதைப்பொருள்களிலிருந்தும் இந்த நாட்டை மீட்டுப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது.

ஊர்களில் இருந்தவர்களை அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தி எமது நாட்டின் பாதாளக்கோஷ்டியை பாரியளவில் வளர்த்தெடுத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தன கோனவல சுனிலுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆர். பிரேமதாச சொத்தி உபாலியை நிறைவேற்றுச் சபைக்கு எடுத்தார். சந்திரிக்கா குமாரதுங்க பெத்தெகான சஞ்சீவவை தனது பாதுகாப்பு பிரதானியாக நியமித்துக்கொண்டார். நாமல் ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குபவர் ஜுலம்பிட்டிய அமரே. இந்த ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளின் ஜெனரல்மார்களின் பாதுகாப்பு போதாதென பாதாளக்கோஷ்டியிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த நிலைமையை மாற்றியமைத்திட புதிய எழுச்சி, ஒருமைப்பாடு,  புதிய மலர்ச்சி எமது நாட்டுக்கு அவசியமாகும்.  அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பாரிய செயற்பொறுப்பு இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவிடம்  கையளிக்கப்படுகின்றது. அதனை சிறப்பாக ஈடேற்றுவீர்கள் என்பது எம்மனைவருக்கும் உறுதியானதே. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.