சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குச் சிறீதரன் கடிதம்! இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு –

மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன்.

32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில்  அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அவரது கோரிக்கைக்கு விரைந்து ஆவன செய்க. – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.