டிக்கோயா நகர சபைக்குள்ளே சுகாதார சீர்கேடு படு மோசம்!

நகரமெங்கும் கழிவுகள் அற்புறப்படுத்தாமல் தேங்கியிருந்தால் அது  இலங்கையில் ஹற்றன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட  பிரதேசமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். கழிவுகளை அற்புறப்படுத்துவதற்கோ அல்லது அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கோ இன்னும் ஓர்; இடம் தெரிவு செய்யப்படாமல் இலங்கையில் இருக்கும் ஒரே நகர சபை ஹற்றன் டிக்கோயா நகரசபையாகும்.

நகரங்கள் மற்றும் அதையண்டிய குடியிருப்புப் பிரதேசங்களில் தான் இந்த நிலைமைகள் என்றால் நகரசபைக்குள்ளேயே குப்பை கூழங்கள் நிரம்பித்தான் உள்ளன. மேலே காணப்படும் மலசல கூடமானது ஹற்றன் டிக்கோயா நகரசபைக்குள்ளே அமைந்திருக்கின்றது. நகர சபை மண்டபத்தை நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்துபவர்கள் பாவிக்கும் மலசல கூடங்களாகும். இந்த மண்டபத்தை உபயோகிக்க ஒரு தொகைக் கட்டணத்தை நகர சபை அறவிடுகின்றது. ஆனால் மலசல கூடம் இப்படித்தான் உள்ளது.

இதன் காரணமாகவே பலர் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலயங்களில் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு சென்று விடுவர். அதே போன்று நகரசபையின் பின்புறம் கழிவுகள் போடப்பட்டு அகற்றப்படாமல் நெடுநாள்களாக உள்ளன. நகரசபையில் ஒரே ஒரு  சுகாதார பரிசோதகரே இருக்கின்றார். தான் பணிபுரியும் கட்டடத்துக்குள்ளே இவ்வாறு இருப்பதை அவர் எவ்வாறு அறியாதிருக்கின்றாரோ தெரியவில்லை.

நகர வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்புப் பிரதேசங்களுக்குச் சென்று சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நகர சபை சுகாதாரப் பிரிவு தனது கட்டடத்தை எவ்வாறு வைத்திருக்கின்றது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஹற்றன் டிக்கோயா நகரசபை, கடந்த தீபாவளி பண்டிகை வியாபாரத்துக்காக தற்காலிகக் கடைகளை வழங்கியதன் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஐம்பது லட்சம் ரூபா செலவில் ஹற்றன் பஸ் நிலைய வளாகத்தை நகரசபை நிர்வாகம் சீர்படுத்தியது. ஆனால் தனது காரியாலயத்துக்குள்ளே இவ்வாறு ஒரு நிலைமை இருப்பதை நகர சபை செயலாளர் எவ்வாறு கண்டும் காணாதமை போன்று இருக்கின்றார் என மேற்படி மண்டபத்தைப் பயன்படுத்துபவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.