வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடல் கல்முனை மாநகர சபை திட்டம்!

(ஏ.எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை பிற்பகல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தனியார் பங்களிப்புடனான நகர அழகுபடுத்தல் திட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டத்திற்கு அமானா வங்கி அனுசரணை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள 150 வீதிகளுள் கல்முனை- மட்டக்களப்பு மற்றும் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதிகளில் இருந்து ஆரம்பிக்கும் 40 வீதிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர பிரதேசங்களில் நீண்ட காலங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வீதிகளின் பெயர்ப் பலகைகள் சேதமடைந்தும் அழிவடைந்தும் காணப்பட்டதுடன் சில வீதிகளின் பெயர்ப் பலகைகள் இருந்த இடமும் இல்லாமல் போயுள்ளன. இதனால் வெளியிடங்களில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் மாத்திரமல்லாமல் உள்ளூர் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இக்குறைபாட்டைக் கருத்தில் கொண்ட மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, இது விடயத்தில் அதிக கரிசனையுடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இவ்வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத் திட்டத்திற்கு அமானா வங்கி அனுசரணை வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், அமானா வங்கியின் கல்முனை நகரக் கிளை முகாமையாளர் எம்.ரி. நயீமுல்லாஹ், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சிபான் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.