நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ ஆரம்பிப்பதே உண்மையான பூரணமான சுதந்திர தினம்!  கிழக்கின் கேடய முன்னாள் தலைவர் எஸ்.எம். சபீஸ்  கருத்து  

மாளிகைக்காடு செய்தியாளர்

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழத் தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த சுதந்திரத்தைப் பெற நமது மூத்தோர்கள் கடுமையாக போராடி உள்ளார்கள். அந்த சுதந்திரத்தை வைத்து நாம் நிம்மதியாக வாழ்கின்றோமா என்றால் இல்லை. நிம்மதியும் சேர்ந்து வந்தால் தான் அது பூரண சுதந்திரம். எமக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதை போன்றே தாய் நாடும் முக்கியம். எமது சந்ததிகளுக்கு எமது தாய் நாட்டின் மீதான பற்றை சிறு வயது முதலே நாம் ஊட்ட வேண்டும். தேச பக்தியும், தேச உணர்வும் அவர்களுக்கிடையே வருகின்ற போது தான் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வு வரும். நாட்டை முன்னேற்ற நினைக்கின்றவர்களால் தான் தனது சமூகத்தையும், ஊரையும் முன்னேற்ற முடியும் என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

தலைவர் அஸ்ரப்பின் அரசியல் உதயத்தின் பின்னரே முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சமூகம் சரியான தலைவர்களின் பின்னால் செல்ல வேண்டும். அதற்காக கட்சி, பிரதேச வாதங்களைத் துறந்து எம்மை சிறப்பாக வழிநடத்தக்கூடிய சரியான தலைவர்களைத் தெரிவு செய்யுங்கள். பொருளாதாரமும், சுய கௌரவமும் ஒழுங்காக என்று கிடைக்கிறதோ அன்றே முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

இந்தக் காலத்திற்குப் பொருத்தமான வகையில் நாட்டின் கல்வி முறையில் மாற்றம் தேவை என்று உரியவர்களை கிழக்கின் கேடயம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். குழந்தைகளை பாடமாக்கும் கல்வி முறையிலிருந்து மாற்றியமைத்து சவால்களை எதிர்கொள்ளும் திராணியுள்ள தலைவர்களாக உருவாக்க அவர்களின் மீது கவனம் செலுத்துங்கள் என்றார்.

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளருமான ஊடகவியலாளர் நூருல் ஹூதா உமர் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர், பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியேகத்தர்கள், மனித அபிவிருத்தி ஸ்தாபன இணைப்பாளர், பாலர் பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.