எமது கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பினர்!

‘தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்’ என  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்  தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற கறுப்பு தின போராட்டத்தை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் சேர்ந்து, வடக்குக் கிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்திருந்தோம்.

இதன்போது எங்களுக்கு  போராட்டத்தை நடத்த  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்துவதற்காக மதகுருமார்களை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.

எனினும் முகநூலில் சாணக்கியனின் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்குத் தெளிவூட்டவேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது. எங்களுடைய போராட்டங்களை திசை திருப்புகின்ற வகையில் அரசியல்வாதிகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது உணர்வுகளுடன் நமது உயிர்களுடன் விளையாடாமல் நமது உறவுகளைத் தேடும் பயணம். இது இந்தப் பயணத்திற்கு அனைவரும் ஓர் உந்து சக்தியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தங்களுடைய பெயர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லது தங்களை முன்னுரிமையாகக் காட்டுவதற்காக எம்மை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை யாரும் இறங்கக்கூடாது எனத் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.