கிளிநொச்சி மாவட்ட   ஒருங்கிணைப்பு குழு!

கிளிநொச்சி மாவட்ட மாசி மாதத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.

மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டங்களின் அபிவிருத்தி திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கடந்த மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் 04.01 2024 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டதின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர் வழங்கல், வீடமைப்பு, மின்சாரம், போக்குவரத்து, சமுர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வள திணைக்களம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகிய திணைக்களங்களின் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

வெள்ளப் பாதிப்பால் நெற் பயிர் அழிவுக்கான விவசாய காப்புறுதி திட்டம் மற்றும் சட்ட விரோத செயற்படுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன,

இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.நளாயினி , வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்