இயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உலகில் யுத்தமே என்றும் நடக்காதாம்! எழுத்தாளர் கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா கருத்து

 

இயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உலகில் யுத்தமே நடக்காது. இயற்கை நுண்ணறிவு அன்பைப் போதிக்கிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதால் தான் ரஸ்ய உக்கிரைன் யுத்தம் உருவானது. இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் உருவானது என தொழிலதிபரும் எழுத்தாளருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா கல்லாறு சதீஸ் சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

சூரியனால் மட்டும் கிழக்கு சிவக்கவில்லை, இனமோதல்களால் மதமோதல்களால் இயக்க மோதல்களால் பிரதேச மோதல்களாலும் கிழக்கு சிவந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல் அறிமுக விழா ஊடகவியலாளர் தாந்தியான் வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு சூரியனால் மட்டும் சிவக்கவில்லை. பல்வேறு பிளவுகளாலும் சிவந்திருக்கிறது. போரின் வலிகளை மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை ஆதாரபூர்வமாக இந்நூல் பேசுகிறது. இது ஓர் ஆவணம். இந்நூல் அடுத்த சந்ததிக்கும் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

விபுலானந்த அடிகளார் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஆளுமைமிக்க ஒருவர். அவர் அன்பை போதித்தார். கல்வியைப் போதித்தார். பல கல்லூரிகளைக் கட்டித்தந்தவர். அவர் கல்முனையில் தான் ஆரம்ப கல்வியை கற்றார். அந்த கல்முனையில் 1990 ஜூன் 20ஆம் திகதி நடந்த சம்பவங்களை அறிகிற போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. அந்த அவலங்கள் துன்பங்களை இழப்புக்களை எல்லாம் இந்நூல் பேசுகிறது என அவர் தெரிவித்தார்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுவிட்ஸர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினரும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் தொழிலதிபருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் உரையாற்றுகையில் –

எமது இனத்தின் வலிகளைச் சுமந்து வந்திருக்கும் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற இந்நூல் ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசத்தின் முன் நாம் நீதி கோர வேண்டுமாக இருந்தால் இத்தகைய ஆவண நூல்கள் பிறமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். சுவிட்ஸர்லாந்தில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்ட போது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதனைத் தெளிவூட்டும் வகையில், தான் பணியாற்றிய தொலைக்காட்சியில் என்னிடம் செவ்வி ஒன்றை எடுத்து ஒளிப்பரப்பினார். அந்த பிரசாரம் எமக்கு பெரும் வெற்றியை தந்தது. சமூக பொறுப்போடு நீண்டகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர் கடந்த காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அவலங்களை போர்க்குற்றங்களை ஆதாரங்களுடன் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.

காலத்தின் தேவைக்காக அவர் இதனை மிகுந்த பொறுப்புணர்வுடன் எமக்குத் தந்திருக்கிறார். அவரின் இந்தப் பணிகளுக்கு என்றும் எனது ஆதரவு இருக்கும் என கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நூல் அறிமுக உரையை எஸ்.ஜெயமோகனும் நூல் விமர்சன உரையை ஊடகவியலாளர் புஸ்பராசா அசோக் லூயிஸூம் நிகழ்த்தினர்.
ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் இரா.துரைரத்தினம் நிகழ்த்தினார்.

நூலாசிரியர் இரா,துரைரத்தினம் அவர்களுக்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஞா.குகநாதன் அவர்களும் உலக இந்து ஆத்மீக அறக்கட்டளையின் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.