பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பெண்கள் மீண்டெழ உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு! செட்டிகுளம் – காந்திநகரில்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

செட்டிகுளம், பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டில் பல வருடங்களாக பயன்படுத்தப்படாது இருந்த கட்டடம் மக்களின் பொருளாதார விருத்திக்காக இதன்போது மாற்றியமைக்கப்பட்டது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுக் கட்டடமானது கடந்த பல வருடங்களாக எந்தவித பயன்பாடும் இன்றி மூடப்பட்ட நிலையில் இருந்தது.

அதனை செட்டிகுளம் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சியான்மை பிரிவின் உதவியோடு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியோடும் மின் இணைப்பு பெறப்பட்டு, ஐ.நா இணை நிறுவனமான யுஎன்டிபி நிறுவனத்தால் கட்டடம் மீள் திருத்தம் செய்யப்பட்டு இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

குறிப்பாக, அப் பகுதி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் தேவை என்பவற்றைக் கருத்தில் கொண்டு உளுந்து உடைத்தல், எண்ணெய் திரித்தல், சத்துமா உற்பத்தி, வாசனை திரவிய உற்பத்தி என்பவற்றுக்கு ஏற்ற வகையில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு குறித்த நிலையம் காந்திநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் அப் பகுதி பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், கிராம அலுவலர் அஸ்லம், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், காந்திநகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், காந்தி நகர் மகளிர் அபிவிருத்திச் சங்கத்தினர், யுஎன்டிபி நிறுவனத்தினர்,  பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.