உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை பாடசாலைகளுக்கு சூட்டுவதற்கு தடை! கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அதிரடி

(ஏ.எம்.ஆஷிப்)

உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணித்துள்ளார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகள் மற்றும் கட்டடங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே இவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தனி நபர்களின் பெயர்களை அரச பொதுக் கட்டடங்கள், பாடசாலைகள், வீதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட எந்தவொரு அரச சொத்துக்களுக்கும் சூட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்