உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாகஅனுபவிப்போரின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்கு நன்மை தரா! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிக்கும் தென்னிலங்கை, அரசியல்வாதிகள் பொறுப்பற்ற பேச்சுக்களால் மீண்டும் இனங்களுக்கிடையே விரிசலும் நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்  இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முன்வைத்து மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை நீக்கவுள்ளதாக பிரித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இது அரசினுடைய கருத்தல்ல. தேசிய கொள்கையும் அல்ல. ஒரு தனிப்பட்ட கட்சியினுடைய கருத்தாக இருக்கலாம். ஆயினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக கிடைக்கப்பபெற்ற 13 ஆவது அரசமைப்பின் திருத்தத்தினூடான மாகாண சபை முறைமையை இவ்வாறு எற்கனவே பலவீனப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இனிமேலும் இவ்வாறு மேற்கொள்ள முயற்சிக்கப்படலாம்.

இதுபோன்று ஏற்கனவே இவ்வாறு பலவினப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி ஒன்றின்போது  சந்திரிகா அம்மையாருடைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக இடதுசாரி கட்சிகளின்  நாடாளுமன்ற உறுப்பினர்ளின் 50 இற்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று  சபையில் சமர்ப்பித்து அதனை முறியடித்திருந்தார்.

ஆனாலும் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்தின் மூலம் இதை தடைதாண்டுவோம். அதற்கு நல்லிணக்கம் ஒருபுறமும் அரசியல் பிரதிநிதித்துவப் பலமும் இந்த இடத்தில் தேவைப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

மேலும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமான அல்லது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை மலின்படுத்தும் இவ்வாறான பேச்சுக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதேநேரம் மாகாணசபைகளுக்கு இருந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இன்றைய எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ தனது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்பரெலிய மற்றும் சப்ரிகம
எதேச்சாதிகாரத் திட்டம்!

நல்லாட்சி என கூறப்பட்ட ஆட்சிக்காலத்தில் கம்பரெலிய மற்றும் சப்ரிகம போன்ற திட்டங்கள் மக்களின் விருப்பகளுக்கு அப்பால் வடக்கு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட எதேச்சாதிகாரமான தெரிவாகவே இருந்தன.

ஜனாதிபதி செயலகத்தால் தற்போது வடக்கு அபிவிருத்திக்கென தரப்பட்ட நிதி யாழ். மாவட்டத்தின் 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அந்தந்த பகுதி சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அப்பகுதி மூத்த  மக்கள் பிரஜைகள் மூலம் வெளிப்படையாக அரச அதிகாரிகள் முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.

ஆயினும் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தமக்குத் தெரியாமல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன என அப்பட்டமான பொய்யை உரைத்திருந்தார்கள்.

உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பிரதிநிதிகளும்  குறித்த  அபிவிருத்திக்குத் தெரிவான  கட்டங்களில் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் திட்டங்களையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து அங்கீகரிக்கும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரனின் பிரதிநிதியாக வலி.வடக்கு முன்னாள் தவிசாளர் சுகிர்தனும், தமிழ் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் பிரதிநிதியும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.

ஆனால் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமக்கு இந்த விடயம் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் காலதமாக அறிவிக்கப்பட்டிருப்பின் உடனடியாகவே சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கோ அரச அதிபருக்கோ தமது காரணங்களைத் தெரிவித்திருக்க வேண்டும்.

மாறாக மக்களின் தெரிவுகளாக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் கூட்டத்தில் தமது மலினமான அரசியலை வெளிப்படுத்தியிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஜேவிபியின் நிலைப்பாட்டை
நட்புடன் எதிர்பார்க்கிறோம்

இந்தியத் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும்.

இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜேவிபி எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளது எனப் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜேவிபியே முக்கிய காரணமாக செயற்பட்டது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்குக் கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூடத் தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.