பெண்கள் அரசியலில் பங்களிப்பு செய்வதற்கான செயலமர்வுகள்

ஹஸ்பர் ஏ.எச்

ஏ.எச்.ஆர்.சி. நிறுவனத்தால் சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பெண்களை அரசியலில் பங்களிக்க செய்வதற்கான ஆளுமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது .இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் இயங்கும் பெண்கள் அமைப்புக்களை சார்ந்த 22 பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அல்லது பெண்களின் ஈடுபாடுகள் குறைவாகவே காணப்பட்டு வருகின்றமையை வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன. ஆனால் இன, மொழி மத பேதங்களைக் கடந்து பெண் என்ற ஒருநிலையில் பார்க்கும்போது அனைத்து பெண்களும் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

இந்நிலை மாறவேண்டும் இந்நிலையில் இருந்து பெண்களை வெளிக்கொண்டு வருவதன் ஊடாக ஆளுமை திறன்கள் உள்ள பெண்களை இனங்கண்டு அவர்களின் தேர்தல் ஈடுபாடுகளை அதிகரிக்கச் செய்தலின் ஊடாக எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பைக் கூட்டுவதை நோக்கமாக கொண்டும் இலங்கை மக்கள் தொகையில் 52 வீதமாக இருக்கும் பெண்களை தேர்தலின் பங்களிக்க செய்து அவர்களின் அரசியல் பலத்தின் ஊடாக பெண்களின் அனைத்துவிதமான உரிமைகளையும் அனுபவிக்கச் செய்வதையும் நோக்காகக் கொண்டு  பெண்களை தேர்தல்களில் பங்களிக்கச் செய்தல் எனும் தொனிப்பொருளின் ஊடான கருத்தரங்கை மேற்கொண்டிருந்தனர்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ரீதியில் இயங்கும் பெண் செயற்பாட்டாளர்கள் 22 பேர் கலந்துகொண்டிருந்தனர். இதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டத்தரணியும் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளரும் ஆகிய மயூரன் பிரசான்டினியும் வளவாளர்களாக அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பெண் செயற்பாட்டாளர்களான சஞ்ஜலிதா குணாளன்,  நாகேஸ்வரன் மிரேகா மற்றும் பெண் செயற்பாட்டாளர்களான சிவநாதன் நிரோஜா, வேலன் குமாரி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.