கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முஸ்லிம் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பாம்  தொழிலதிபர் ஏ.கே.அமீர் குற்றச்சாட்டு

கே எ ஹமீட்

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் குற்றச்சாட்டினார்.

அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கல்வி விருது விழா அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அதன் தலைவர் அன்வர் நௌசாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

கல்வியியலாளர்கள் கௌரவிக்கப்படுகின்ற ஒரு விழாவில் பேசக் கிடைத்ததையிட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

பலரும் பலதை பேசினாலும் இந்த சபையில் பேசுவது பொருத்தம் எனக்கருதி சிலவிடயங்களை பேசலாம் என்று நினைக்கின்றேன்.

பொருத்தமான விசேட தரமிக்க, சிரேஷ்டத்துவம் மிகுந்த நிருவாகிகளுக்கு பொருத்தமான இடம் வழங்கப்படாமல் பழிவாங்கப்படுகின்றனர். சிரேஷ்டத்துவம் மிகுந்த அதிகாரிகளை அவமானப்படுத்தி சிரேஷ்டத்துவம் குறைந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட  பதவிகள் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர். இதனைக் கேட்பதற்கு யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீ ல.மு.கா.கட்சியின் தலைவர் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இது தொடர்பில் மிகுந்த அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அவர்.

இந்நிகழ்வில் ஸ்ரீல.மு.கா.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைஷால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உட்படப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.