இறக்காமம் பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் தெரிவு!

நூருல் ஹூதா உமர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு, கலை கலாசார நிகழ்வுகள், பயிற்சி மற்றும் போட்டிகள், தொழில் பயிற்சிகள், கல்வி வழிகாட்டல், தலைமைத்துவம், தேசிய நிகழ்வுகள், இளைஞர் நாடாளுமன்றம், சர்வதேச நாடுகளுக்கிடையிலான இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.

மேற்படி வேலைத்திட்டங்கள் யாவும் அடிப்படையில் பிரதேச மட்ட இளைஞர் கழங்கள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்ட சம்மேளன  கட்டமைப்பின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இறக்காமம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். றியாஸின் நெறிப்படுத்தலில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் திருமதி கங்கா சாகரிக தமயேந்தி கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.எம். சிறிவர்த்தன மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் றகீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத் தலைவர்கள், அனைத்து இளைஞர் கழகப் பிரதிநிதிகள் பங்கேற்புடன் 2024 ஆம் ஆண்டுக்காண பிரதேச மட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவு சுமுகமான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இறக்காமம் பிரதேச சம்மேளனத்தின் தலைவராக ஹை 20 இளைஞர் கழகத்தின் உறுப்பினர் ஏ. றிஜாஸ், உப செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ. நிப்ரி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் சம்மேளனத்தின் ஏனைய பொறுப்புகளுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் பிரதேச சம்மேளனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலைந்துரையாடப்பட்டதுடன் முன்மாதிரி மிக்க இளைஞர் சம்மேளமான செயற்படுவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன