தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அணுக்கரு மருத்துவசிகிச்சைக்கு எதிர்ப்பு? வைத்தியசாலை நிர்வாகத்தால்

வட மாகாணத்திலுள்ள ஒரேயொரு அதிவிசேட புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ளது. இந்தப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை இங்கு உருவாக்குவதற்கு எத்தனையோ நன்நோக்குக் கொண்ட அன்புள்ளங்களின் வியர்வை சிந்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஈ.எஸ்.பி. நாகரட்ணம், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் குடும்பம் புற்றுஆநாய் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் ஜெயக்குமார் உட்பட மகேல ஜெயவர்த்தக, நாதன் சிவகணநாதன், சரிந்த உடும்புவே ஆகியோரின் தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை ஊடாக நடைபவணியில் சிறுகச்;சிறுகப் பணம் சேர்த்து மிகப் பிரமாண்டமாக வடக்கு கிழக்கு ஏன் அதற்கு அப்பால் அநுராதபுரம், புத்தளம், சிலாபம் வரைக்கும் மக்கள் உயிர்காக்கும் ஒரு சுகாதார நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு காணப்படுகின்றது. அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து வைத்தியசாலையை பொறுப்பேற்ற ஒவ்வொரு நிர்வாக அதிகாரிகளும் இதன் தரத்தை உயர்த்துவதற்காக வியர்வை சிந்தினார்கள்.

இலங்கை முழுவதற்குமான, தமிழ் பேசும் புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்கான முதன்மைத் தேர்வாகவும் இதுவே அமைந்துள்ளது. ஆயினும், புற்றுநோயாளர்களின் நோயின் தீவிரத் தன்மையை அறிந்துகொள்ள உதவும் விசேட இரத்தப் பரிசோதனைகள் பலவற்றை மேற்கொள்ளும் வசதிகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலோ அல்லது யாழ்.போதனா வைத்தியசாலையிலோ கிடையாது. நோயாளர்கள் பெருந்தொகைப் பணம் செலவு செய்து, தனியார் ஆய்வுகூடங்களை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே உள்ளது. இதற்கான பணவசதியும் பெரும்பாலான நோயாளர்களிடம் கிடையாது.

இந்நிலையிலேயே, இத்தகைய விசேட இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய அணுக்கரு சிகிச்சைப் பிரிவொன்றை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமைப்பதற்கு யாழ் மருத்துவபீடம் முன்வந்தபோது, புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் அதனைப் பெரு விருப்புடன் வரவேற்றிருந்தனர். அதனடிப்படையில், சில வருடங்களுக்கு முன்பாக தற்போதைய பணமதிப்பில் சுமார் 75மில்லியன் (ஏழரைக் கோடி) ரூபாக்கள் பெறுமதியான பரிசோதனை இயந்திரம், சர்வதேச அணுசக்திக் கழகத்தின் அனுசரணையில் கொள்வனவு செய்யப்பட்டு அதற்கென தெரிவு செய்யப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டது. ஆயினும் அசாதாரண நாட்டுச் சூழ்நிலைகள் காரணமாக அதன் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் தொடர் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தன.

ஆயினும், இதன் செயற்பாடுகளை விரைந்து ஆரம்பிப்பதில் யாழ். மருத்துவ பீடமும் வைத்தியசாலைப் புற்றுநோய் நிபுணர்களும் தீவிர ஆர்வம் காட்டி வந்த நிலையில், இதற்கான ஆய்வுக்கூட்டமொன்று கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையிலேயே, இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தால் கொழும்பு சுகாதார அமைச்சிற்கு ஆட்சேபனைக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. கதிரியக்கம் தொடர்பாக பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கி இக்கடிதம் வரையப்பட்டுள்ளது.

மிக ஆபத்தான, அதிக கதிரியக்கமுடைய பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளை வழங்கும் கட்டமைப்புடைய தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு, புறக்கணிக்கத்தக்க மிகக்குறைந்தளவு கதிரியக்கத்தை மாத்திரமே வெளியிடும் தற்போதைய பரிசோதனை இயந்திரம் சாதாரணமானதும் ஆபத்தற்றதுமாகும். இப்பிரிவை இயக்கவுள்ள யாழ்.மருத்துவபீட உத்தியோகத்தர்கள் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளதோடு, இலங்கை அணுசக்தி அதிகார சபையின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழேயே இதன் செயற்பாடுகள் அமையவுள்ளன.

இவ்வாறிருக்கையில், பல்லாயிரக்கணக்கான ஏழைப் புற்றுநோயாளர்களின் துன்பங்களுக்குப் பரிகாரமாக அமையவுள்ள ஒரு நல்ல முயற்சியை இவர்கள் குழப்புவதற்கான பின்புலத்தை ஆராய்ந்தவேளை அதிர்ச்சியான விடயம் வெளிவந்தது. இத்தகைய அதிக விலை கொடுத்து செய்யப்படவேண்டிய இரத்தப்பரிசோதனை வசதிகள் பல அரச வைத்தியசாலைகளில் இன்மையால் தனியார் பெரு ஆய்வுகூட நிறுவனங்கள் மாதாந்தம் லட்சக்கணக்கில் இலாபமடைந்து வந்துள்ளன. மேற்படி சிகிச்சைப் பிரிவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமையுமிடத்து தங்களின் வருவாய் பாதிப்படையுமென்பதனால் தங்களுடன் ஏற்கனவே தொடர்பிலுள்ள வைத்திய நிர்வாகிகள் மற்றும் ஆய்வுகூட வைத்திய நிபுணர்கள் மூலமாக இதனைக் குழப்புவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகரால் கையொப்பமிடப்பட்டு கொழும்பு சுகாதார அமைச்சிற்கு அனுப்பப்பட்ட கடிதமும் இத்தகையதோர் ஆய்வுகூட வைத்திய நிபுணரின் பின்னணியிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வடமாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்திற்குட்பட்ட தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரிற்கு கொழும்பு மத்திய சுகாதார அமைச்சிற்கு கடிதம் எழுதும் அதிகாரம் எதுவும் கிடையாது. அவரால் அவரிற்கு அடுத்த உயர் நிலையிலுள்ள யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கு மாத்திரமே கடிதம் எழுத முடியும். அவரிற்கும் மேலாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளனர். இத்தனை அதிகாரிகளை மீறி கொழும்பு மத்திய சுகாதார அமைச்சிற்கு கடிதம் எழுதிய விவகாரம் சுகாதார உத்தியோகத்தர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாபன விதிக்கோவையின் அடிப்படை விதிகளை மீறிய இச்செயற்பாட்டுக்கெதிராக திணைக்களக விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்டுள்ளன.

மனிதநேயமற்ற முறையில் செயற்படும் இத்தகைய அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கெதிரான விசாரணைகளைக் கோருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடமும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

பாவம், வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்கள். வியாபார முதலைகளால் எத்தனையோ சாதாரண மக்கள் சிகிச்சைகளைப் பெறுவதற்காக அல்லற்பட்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று ஒட்டாண்டியாகியும் உயிரைக்கூட கடைசியில் காப்பாற்றமுடியாத ஏதிலிகளாக மாறும் நிலைமையே ஏற்படும் நிலையில் உள்ளனர்.