தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு

 

இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி என்பது மிக முக்கியமாகும்.

எனவே, இங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களும் தமது தொழில் கல்வியை முறையாக பயின்று, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹற்றனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் பங்கேற்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் தேசபந்து வீ.ஜீவனந்தராஜா, நிலையத்தின் அதிபர் கெப்ரியல், பொலிஸ் அதிகாரிகள், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் இருந்து நிகழ்நிலை ஊடாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், புதிய மாணவர்களை வரவேற்றதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

மலையக இளைஞர்களை தொழில்ரீதியாக பலப்படுத்தவும், அதன்மூலம் வாழ்க்கையில் அவர்கள் அடுத்தகட்டம் நோக்கி பயணித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற உயரிய நோக்கிலுமே இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிறந்த முறையில் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இங்கு பயின்ற பலர் சமூகத்தில் இன்று சிறந்த நிலையில் இருந்து, எமது சமூகத்துக்கும் பங்களிப்பு வழங்குவதை காணமுடிகின்றது. இதையே நாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

புத்தகக் கல்வியைப்போன்றே அனுபவக் கல்வியும், பயிற்சிக் கல்வியும் முக்கியம். ஆக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனைவரினதும் கல்வி நடவடிக்கையும், எதிர்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். – – எனவும் அமைச்சர் கூறினார்.