வங்கிக் கடன் செலுத்துதல் 13 வீதத்தால் குறைவடைவு!  நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற அமர்வின் போது சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் ஒரு தரப்பினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து மாத்திரம் விசேட கவனம் செலுத்த முடியாது. ஒட்டுமொத்த மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு தான் நிதி நிலைமை குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொள்வது அத்தியாவசியமானது. வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வணிக கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. நாட்டில்  5 கோடியே 75 லட்சம் வங்கி வைப்பாளர்கள் உள்ளனர்.

இவர்களில்  60 சதவீதமான வைப்பாளர்கள் 5,000 ரூபாவுக்கும் குறைவான வைப்புக்களையே வைத்துள்ளனர். ஆகவே, நிதி நிலைமை தொடர்பில் தற்போது மறுசீரமைப்புக்கள் ஏதேனும் செய்தால் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளது. – என்றார்.