வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு! விரைவில் அமைச்சரவை பத்திரம் என்கிறார் திலீபன் எம்.பி

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு மைதானம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள காணி ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் கலந்துரையாடியமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா மாவட்டத்தில் உள்ள முதன்மையான பாடசாலைகளில் ஒன்றாகிய விபுலானந்தா கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 70 வருடமாக மைதானம் இல்லாது குறித்த பாடசாலை பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி வந்தது.

மைதானத்தைப் பெறுவதற்கு பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது வரை மைதானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் குறித்த பாடசாலைக்கு என மைதானம் அமைக்க காணியினை பெறுவது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகத்துடன் கலந்துரையாடினேன். விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து அதனூடாக மைதானத்திற்கான காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.