வவுனியா வடக்கு – இராசபுரம் குடியேற்ற மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பஸ் வழங்கல்!

வவுனியா வடக்கு, சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் பயணத்திற்காக பஸ் ஒன்று புலம்பெயர் தமிழர் அமைப்பால் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் பூந்தோட்டம் முகாமில் தங்கியிருந்த நிலையில் புலம்பெயர் தமிழ் வர்த்தகரான அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக 150  குடும்பங்களுக்கு வவுனியா வடக்கு, சின்னடம்பன், இராசபுரம் பகுதியில் காணியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இங்குள்ள 50 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு பல்வேறு சிரமங்களுடன் சீரற்ற வீதியால் காட்டுப் பாதையூடாக நடையாகவும், சைக்கிளிலும் சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக பஸ் ஒன்று வழங்கப்பட்டதுடன், அதற்கான சாரதியும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பஸ் அக் கிராமத்தில் இருந்து தினமும் பாடசாலை சேவையில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கைக்காக சர்வதேச ரீதியில் பளுதூக்கல் போட்டியில் பங்கு பற்றி வரும் யாழ் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த ச.புசாந்தன் அவர்களுக்கு அவரது வெற்றி வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக 21 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அரசாங்க அதிபரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான துணைத் தலைவர் சுந்தரம் அருமைநாயகம், இலங்கையின் பளுதூக்கல் வீரர் ச.புசாந்தன், வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரமுகர்கள், கிராம ஆர்வலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்