டிஜிடல் கடன் மோசடியில் சிக்கிய சந்தேகநபர்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை தொடர்பில் நீண்ட காலமாக சந்தேக நபர்  நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஒரு டெப் கணினி, 6 கைப்பேசிகள், 8 விதமான வங்கி அட்டைகள் மற்றும் சுமார் 40,000 ரூபாயை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளில் சந்தேகநபர் இணையத்தில் கடன் வழங்குவது என்ற போர்வையில் நாடளாவிய ரீதியில் உள்ளவர்களிடம்  கடன் சேவைக் கட்டணமாக 3000 முதல் 5000 ரூபா வரை பல்வேறு வங்கிகளின் ஊடாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடன் தொகையை வழங்காமல் சம்பந்தப்பட்ட கடனுதவி விண்ணப்பித்தவர்களை தவிர்த்து சந்தேக நபர் இந்த மோசடியை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சந்தேகநபர் பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று  மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.