நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்திய இராணுவ தளபதி

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ,தனிநபர் ஒருவருக்கும் இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இராணுவத் தளபதியினால் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 07) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷார சாலிய ரணவக்க மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான கூகுள் மற்றும் அதன் நிகழ்நிலை காணொளி பகிர்வு தளமான யூடியூப் ஆகியோர் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தனது வழக்கைத் தாக்கல் செய்த இராணுவத் தளபதி, பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும், அவதூறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மேலும் பரப்பப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.