இந்தியர்கள் டீசன்டாக இருக்க வேண்டும்!- சீன நாளிதழ் அறிவுரை

என்.எஸ்.ஜி எனப்படும் அணுஆயுத விநியோகக் குழுவில் இடம் பெற இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால்தான் பல நாட்டுத் தவைலவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு திரட்டி வருகிறார்.சீனாவோ இந்த விஷயத்தில் இன்னும் அழுத்தமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்டி வருகிறது.

அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் (என்பிடி) அணுகுண்டு சோதனை தடை ஒப்பந்தத்தில் ( சிடிபிடி ) கையெழுத்திட மாட்டோம் என்று ஏற்கனவே இந்தியா உறுதிபட தெரிவித்துவிட்டது. அதே போல் பாகிஸ்தானும் கையொப்பமிடவில்லை. என்எஸ்ஜியில் இந்தியாவை இணைத்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டுமென சீனா வலியுறுத்துகிறது. அதே வேளையில் அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிடாத பிரான்ஸ் என்.எஸ்.ஜியில் உறுப்பினராக உள்ளது. பிரான்சை காரணம் காட்டிதான் இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பினராக முயற்சித்து வருகிறது.

இந்தியாவின் முயற்சியைக் கண்டிக்கும் வகையில் சீனாவின் தேசிய நாளிதாளான ‘குளோபல் டைம்ஸ்’ இந்தியாவுக்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 1975ம் ஆண்டு அணுஆயுத விநியோக நாடுகள் குழு உருவான போது, உறுப்பினராக இடம் பெற வேண்டுமென்றால் முதலில் அணுஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் இந்தியா கையெழுத்திடவில்லை. முதல் விதியையே இந்தியா மீறுகிறது.

இதுவே உறுப்பினர்களாக உள்ள மற்ற நாடுகளை இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வைக்கிறது. மற்ற நாடுகள் எல்லாம் கையொப்பமிட்டிருக்கும் போது, இந்தியாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு கேட்கிறது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுகின்றன. இந்தியா அப்படியொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது. சீனாவின் ஜிடிபியில் 20 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு நாடு எப்படி எங்களுக்கு இணையாக முடியும்.?” என கேள்வி எழுப்பியுள்ளது.

”சீனாவை கட்டுக்குள் வைப்பதற்காகவே வாஷிங்டன் இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. அமெரிக்காவுடன் நேசம் பாராட்டி அமெரிக்கா மட்டுமே உலகம் என கருதி இந்தியா இவ்வாறு அற்பத்தனமாக நடந்து கொள்கிறது ” என அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்ளையும் ‘குளோபல் டைம்ஸ் ‘ தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்ல ‘பீஹேவ் டீசன்ட்லி’ என இந்திய அரசை குறிப்பிடும் வார்தைகளும் சீனாவை குற்றஞ்சாட்டும் இந்தியர்கள் அடுத்தவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா பவர்புல் என்று தன்னை நினைத்துக் கொள்கிறது . ஆனால் வெளியுறவுத்துறையில் பவர் கேம் ஆடுவது எப்படி? என்பது குறித்து எந்த அறிவும் இல்லை எனவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்