காதலித்து ஏமாற்றியதால் பழி வாங்கினேன்!- வினுப்பிரியா வழக்கில் கைதான சுரேஷ் வாக்குமூலம்

தன்னைக் காதலித்து ஏமாற்றியதால் வினுப்பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து அவரைப் பழி வாங்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் தனது புகைப்படம் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடப்பட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்கூட்டியே இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததாலேயே வினுப்பிரியா இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். இதனால் வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சேலம் எஸ்.பி. வினுப்பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து போலீசாரின் தவறுக்கு மன்னிப்பு கோரினார்.

பின்னர், வினுப்பிரியாவின் உடலை அவரது பெற்றோர் பெற்றனர். இதற்கிடையே வினுப்பிரியா மரணம் தொடர்பாக தனிப்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செல்போன் வாயிலாகவே அந்த ஆபாசப் புகைப்படம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக போலீசாரின் தீவிர விசாரணையில் இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் அந்த பேஸ்புக் ஐ.டி.க்கு அதிக படங்களை அனுப்பியது தெரிய வந்தது. இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் சுரேசை கைது செய்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணையில், வினுப்பிரியாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டதை ஒப்புக்கொண்டார் சுரேஷ். இது தொடர்பாக போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நானும், வினுப்பிரியாவும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினுப்பிரி யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அவரது வீட்டிற்கு சென்றும் நான் பெண் கேட்டேன். அப்போது அவரது பெற்றோர் சமதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் காதலி நமக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற ஆத்திரம் எனக்கு ஏற்பட்டது. இதனால் அவரை பழி வாங்க திட்டமிட்டேன். அதன்படி வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதால் வீட்டிலேயே முடங்கி இருந்தேன். ஆனாலும் போலீசார் விசாரித்து கண்டுபிடித்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

vinupriya-suicide345

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்