மீசாலை கிழக்கிற்கு அமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விஜயம்

கடந்த வாரம் வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத்திட்ட அமர்வின் போது, இறுதிநாள் மீன்பிடி கிராம அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது வாசிப்பு முடிவடைந்த சந்தர்ப்பத்தில், மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் அவர்கள் சுட்டிக்காட்டிய சில விடயங்களில் கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் யாழ் மாவட்டம் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீசாலை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலை தற்போது பாவனையின்றி இருப்பதாக தெரிவித்திருந்த சந்தர்ப்பத்தில், குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் அவர்கள் விரைந்து பரிசீலனை செய்யும் நோக்கோடு 27-12-2016 செவ்வாய் மாலை 1:30 மணியளவில் மீசாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார், குறித்த விஜயத்தின்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் அவர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி முறைப்பாடு தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த பகுதிக்கான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர் அமைச்சரால் அழைக்கப்பட்டிருந்தனர், அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் இருவரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த அரைக்கும் ஆலையானது அரச நடைமுறைகளுக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினருக்கு மாதம் தலா 8000 ரூபாய் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வாடகையை மீசாலை கிராம அபிவிருத்தி சங்கம் மாதாந்தம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த நிலையில் குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவருடன் கலந்துரையாடியவேளையில் அவர்கள் உள்ளீடுகள் கொள்வனவு செய்வதற்கு தமக்கு போதுமான நிதி மூலகங்கள் இல்லாததால் தாம் அதனை பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்ததோடு, தாம் அதற்கான மாதாந்த வாடகையை தவறாமல் செலுத்திவருவதாகவும், எதிர்வரும் தை மாதம் முதல் அரைக்கும் ஆலையை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இறுதியில் இதுதொடர்பாக அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் அரசாங்கத்தால் தமக்கு கொடுக்கப்படுகின்ற வளங்களை உரியமுறையில் பயன்படுத்தினால் மாத்திரமே அதனூடாக உயர்ந்த பயனை அடையமுடியும் என்றும், அந்த வகையில் சகல நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி எதிர்வரும் ஆண்டு சிறப்பாக இந்த அரைக்கும் ஆலையை பயன்படுத்தி உயர் இலாபம் ஈட்ட வகைசெய்யுமாறு சங்கத்தினரிடமும் அதனை மேற்ப்பார்வை செய்யுமாறு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும் பணிப்புரை வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்