மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos, video)

திருகோணமலை சமூக ஆர்வலர் ஒன்றியத்தினால் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) காலை 10.00மணிக்கு உட்துறை முக வீதியில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது.
இவ்வார்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறு தங்களுக்கு நீதியை பெற்று தருமாறு கோரி சட்ட உதவி மையத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டனவர்கள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் மேதகு கிரிஸ்டியன் றோயல் இம்மானுவேலிடம் மகஜரொன்றினையும் வழங்கி வைத்தனர்.
இதில் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்புக்குமான நிலையத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை வீ.யோகேஸ்வரன் மற்றும் அருட்தந்தை என்.பிரபாகரன் மற்றும் மத செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் இராஜகந்த குருக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்மகஜரில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது-
மேன்மை தகு மனித உரிமை ஆணையாளர்
மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
CH 1211 ஜெனிவா சுவிற்சலாந்து
11.01.2017
மேன்மைதகு ஆணையாளர் அவர்களே!
வருகிற பங்குனி மாதம் 22 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் 30ஃ1 தீர்மானத்தின் படி இலங்கை அரசாங்கம் எவ்வகையான முன்னேற்றங்களை கண்டுள்ளது என்பது பற்றி உங்களது எழுத்தினாலான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளீர்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் விசேடமாக தமிழ் மக்களும் 30ஃ1 தீர்மானத்தையிட்டு ஆக்க பூர்வமான முன்னேற்றங்கள் எதையும் காணவில்லை. கடந்த அரசின் காலத்தில் பாரதூரமான துன்பங்களை அனுபவித்த நாங்கள் மாற்றத்தை நோக்கிய நகர்வாக  08.01.2015 இல் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம். அதே வருடம் ஆவணி மாதம் எங்களுடைய பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்தோம். தேசிய ஒற்றுமைக்காக மீள் இணைக்க அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது எங்கள் பிரதிநிதிகள் எதிர்கட்சியில் அமரவேண்டிய சூழல் உருவாகியது. இருந்தும் மீள் இணைக்கத்திற்கும் மீள் நிகழாமைக்குமென எடுக்கப்பட இருந்த உத்தேச நடவடிக்கைகளுக்கு எங்கள் பிரதிநிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். எனினும் நாட்கள் நகரும் வேளையில் அரசாங்கத்தினதும் எங்கள் பிரதிநிதிகளினதும் வெளிப்படைத் தன்மையையும் நம்பிக்கையையும் காணமுடியாத நிலையில் இன்று நாங்கள் வீதிகளில் இறங்கியுள்ளோம்.
இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாங்கள் வேதனையுடனும் விரக்தியுடனும் அறியத்தருவது என்னவென்றால்  30ஃ1 தீர்மானத்திற்கு அமைய கடந்த 1½ வருடங்களாக ஆக்கபூர்வமான முன்னேடுப்புக்கள் எதையும் சந்திக்க வில்லை. இலங்கை அரசாங்கம் உண்மையுடனும் நேர்மையுடனும் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான தன்னுடைய கடப்பாடுகளை தமிழ் மக்களுக்கும், நாட்டிற்கும், சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நா விற்கும் நிறைவு செய்யவில்லை என்பதையிட்டு நாங்கள் எமாற்றப்பட்டவர்களாக நிற்கிறோம்.
இந்த சூழலில்தான் எங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தும் இந்த மகஜரை உங்களுக்கு சமர்பித்து எங்களுடைய எதிப்பார்ப்புக்களும், ஆதங்கங்களும், வேதனைகளும் நீங்கள் பங்குனி மாதம் 22 ஆம் திகதி சமர்;பிக்கவுள்ள எழுத்தினாலான அறிக்கையில் உள்வாங்கப்பட வேண்டுமென கேட்கின்றோம். அத்துடன் மனித உரிமைப்பேரவை நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் அங்கு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்திற்கு அமைய தன்னுடைய கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்துமாறு  கோருகிறோம்.
உங்களுடைய கவனத்திற்கு
1. அரசியல் தீர்வு
புரட்டாதி மாதம் 2015 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளித்துறை அமைச்சர் மீள் நிகழாமைக்கென தமிழ் மக்களுடைய பாதிப்புக்களை நீக்குவதற்கு ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதென உறுதியளித்தார்.
இதனையொட்டி பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்கென ஒரு அரசியல் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இது நாடளாவிய ரீதியில் பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டு தன்னுடைய பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தன்னை ஒரு அரசியல் பேரவையாக மாற்றிக் கொண்டு இதனைச் செயற்படுத்த ஒரு வழிகாட்டுக் குழுவையும், உப குழுக்களையும் நியமித்தது. இந்த உப குழுக்கள் தங்களுடைய சிபார்சுகளை வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்பித்துள்ளனர். இதனைத்  தொடர்ந்து ஜனாதிபதி உப குழுக்களின் அறிக்கைகளைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அரசியல் தீர்வு ஒற்றையாட்சிக்குள்ளே மட்டுந்தான் என தெரிவித்துள்ளார். இன் நிலையில் இது பற்றிய பாராளுமன்ற விவாதம் கால வரையற்ற முறையில் ஒத்திப்போடபட்டுள்ளது.
இது ஆட்சியாளர்களின் மனபோக்கை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்வகையான தேசியவாத கருத்துக்களும் கொள்கைகளும் சுதந்திர கால இலங்கையிலிருந்தே தொடர்ந்து வந்து சமாதானத்தையும், ஒற்றுமையையும் சீர் குலைத்ததுடன் தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். இவ்வாறான தேசியவாத சிந்தனைகள் தொடர்ந்து வந்த தேசிய அரசாங்கங்களினால் முன்னேடுக்கப்பட்டு மாபெரும் அழிவுக்கு வித்திட்டுள்ளது. தற்போதய புதிய அரசாங்கமும் இவ்வாறான சிந்தனைவாதிகளுக்கு துணை நின்று புதிய அரசியல் அமைப்பையும் பேரினவாத சிந்தனைவாதிகளுக்கு ஏற்ற முறையில் உருவாக்க முனைகின்றது.
எங்களுடைய பிரச்சனைகளையும் வேதனைகளையும்; உள்வாங்கி அர்த்தமுள்ள ஒரு அரசியல்யாப்பை உருவாக்காவிட்டால் அரசியல் யாப்புக்கான கருத்துக்கணிப்பில் நாங்கள் சாதகமாக வாக்களிக்க மாட்டோமென  வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
எங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் யாப்பு வடக்கு கிழக்கு மாகாணங்கள்  இணைந்த சமஷ்டி முறையிலான அதியுச்ச அதிகாரப் பகிர்வாகும்.
2. தேசிய கலந்துரையாடல் குழுவும் அதன் அறிக்கையும்.
அ. செயற்பாடு
  நிலைமாறுகால நீதியில் கூறப்பட்டுள்ள   பொறிமுறைகளை உருவாக்குவதற்கென பொதுமக்கள் மத்தியிலான பரந்துபட்ட காலந்துரையாடல் நடாத்தப்பட்டு மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்ட பொறிமுறைகளே உருவாகுமென கூறப்பட்டது. இதன் அடிப்படையில் பல மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னேடுக்கப்பட்டன. இந்த செயற்பாடுகளில் சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்தாலும் இவற்றின் மத்தியிலும் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் கையளிக்கும் வைபவம் பல தடவைகள் பின்போடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் நேரமின்மையே. இதன் பின்னர் 03.01.2017 பிற்பகல் 7 மணிக்கு இவர்கள் இருவரையும் உள்ளடக்கிய நிகழ்வில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அன்றைய  அந்த வைபவத்திற்கு ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பங்களிப்புச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  மேலும் அறிக்கைகள் கையளிக்கப்பட்டதின் பின் அரசாங்கத்தின் பேச்சாளர் எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க மாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இதற்குக் காரணம் தேசிய கலந்துரையாடல் குழு குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதியாவது பிரசன்னமாக இருப்பது உள்நாட்டு நீதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமென பரிந்துரைத்துள்ளதாகும். மக்கள் வெளிநாட்டவரின் பிரசன்னம் விசாரணையின் போதும், வழக்குத் தொடுக்கும் போதும், வழக்கு நடக்கும் போதும், நீதிமன்றத்திலும் இருப்பது உள்நாட்டுப் பொறிமுறையை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுமென கூறியுள்ளார்கள்.
  பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் மனித உரிமைப்பேரவையை நோக்கி வேண்டுவது 30ஃ1 தீர்மானத்தின் படி ஒரு கலப்பு நீதி மன்றத்தை உருவாக்கி பாரதூரமான குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே.
ஆ. காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம்
  நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கென இலங்கை அரசாங்கம் பரந்துபட்ட கலந்துரையாடல் செயற்பாட்டை தோற்றுவித்தது. இந்தக் கலந்துரையாடல் செயற்பாடு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே அரசாங்கம் பாராளுமன்றத்தில் காணால் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தை உருவாக்கும் சட்ட மூலத்தை கொண்டு வந்து அவசர அவசரமாக அதை சட்டமாக்கியது.
  ஒரு முக்கியமான பொறிமுறையை அரசாங்கம் இவ்வாறு உருவாக்கியதையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பத்தினர்  வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பங்கள் தங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் கையாளக் கூடிய ஒரு முழுமையான பொறிமுறையையே கோரியிருந்தார்கள். ஆனால் உருவாக்கப்படடிருக்கும் பொறிமுறையோ இவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் அபிலாஷகளையும் நிறைவு செய்யக்கூடிய ஒன்றாக இல்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
  மேலும் அரசாங்கம் மரணப்பதிவுக்கான தற்காலிக ஏற்பாடான 2010 இலக்கம் 19 சட்டத்தை காணாமல் ஆக்கப்ட்ட சான்றிதழையும் கொடுக்கும் வகையில் 2016 இலக்கம் 16 சட்டத்தின் ஊடாக திருத்தியது.
  இந்த சட்டத்தின் ஊடாக  பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒன்றில் காணாமல் ஆக்கப்பட்ட சான்றிதழ் அல்லது மரண சான்றிதழ் பெறக்கூடிய ஒழுங்குகள் இருப்பினும் அதை பெற்றுக் கொள்வதற்கு உரிய அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காமல் இயங்குவது இவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
  இ. தற்கால நிலவரங்கள்
    நாங்கள் இந்த மகஜரை எழுதுகின்ற இந்த வேளையில் நிலைமாறுகால நீதியையொட்டிய நல்லிணக்க பொறிமுறைகளை திருப்திகரமாக செயற்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. அரசாங்கம் நீதியை நிலை நாட்டுவதற்கு காலத்தை இழுத்தடிப்பது கண்கூடாகத் தெரிகிறது. அத்துடன் நீதியை நிலை நாட்ட அரசுக்கு அரசியல் சக்தி இல்லாதுள்ளது. அரசாங்கம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்தவும் இவ்வாறான அவலங்களைத் தோற்றுவித்த அடிப்படை வாதத்தை திருப்திப்படுத்தவும் முனைவதைக் காண்கின்றோம்.
    சுதந்திர கால இலங்கையின் அரம்பத்திலிருந்தே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வு உருவாக்கப்படவில்லை. இது நிiறைவு பெறாவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு  எதிர்காலம் இல்லாமல் போய்விடலாம்;. இலங்கையும் அதன் பெரும் பான்மை சமூகமும் ஒரு நாடு ஒரு இனம் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு சிறுபான்மை மக்களை அரவணைத்து இலங்கையின் பன்முகத் தன்மையையும், சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வையும் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
3. பயங்கரவாத தடைச்சட்டமும் அரசியல் கைதிகளும்
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பது 30ஃ1 ஜெனிவா தீர்மானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சமாகும். அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலையைக் கோரி பல தடவைகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த வேளையில் அவர்களுடைய விடுதலையை துரிதப்படுத்துவதாக கூறி அவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவும்  இல்லை. இதற்கும் அப்பால் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிகழ்வுகள் இவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சித்திரவதை போன்ற குற்றங்களுக்கும் யுத்த கால குற்றங்களுக்கும் அவர்கள் சாட்சிகளாக உள்ளார்கள்.
சித்திரவதைக்கு எதிரான ஐ. நாவின் குழு சித்திரவதை சம்மந்தமாக இலங்கை அரசு சமர்பித்த அறிக்கையை  அண்மையில் பரிசீலனை செய்தது. இலங்கை அரசிடம் இது பற்றி பல வினாக்களை தொடுத்திருந்தும் இலங்கை அரசாங்கம் திருப்திகரமாக பதிலளிக்க வில்லை என்பது கவனிக்க தக்கதாகும்.
மனித உரிமைப் பேரவை இவ்விடயத்தை அக்கறையுடன் எடுத்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வந்த 1978 ஆம் ஆண்டில் இருந்து நடந்தேறிய சித்திரவதைகளை விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு
ஐ நா வை வேண்டி நிற்கின்றோம்.
4. சித்தரவதையும் சட்டத்திற்கு முரணான கொலைகளும் சார்ந்த விசாரணை
1978 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கிறது. இது தமிழ் சமூகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்பட்ட அனைவரும் பலவகையான சித்திரவதையினால் பாதிப்படைந்துள்ளார்கள். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பலர் நாட்டை விட்டு சென்று இவ்வாறான சித்திரவதைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள். இவ்வாறாக செல்ல முடியாதவர்கள் வேதனைகளை மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களாக இலங்கையிலேயே முடக்கப்பட்டுள்ளார்கள். பலவகையான பாதுகாப்பு  பிரிவினரால் பல்வேறு வகையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்;கானோர் உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் சித்திரவதை என்ற சொல்லுக்கு சமாந்தரமாக உள்ளது.
சித்திரவதை என்பது ஒரு சர்வதேச குற்றமாகும். இலங்கையில் சித்திரவதை பாரிய அளவில் இன, கலாச்சார, மொழி, சமயப் பின்னணியில் மாறுபட்ட ஒரு சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமே. சித்திரவதை என்பது அரசின் எதிர்ப்பாளர்களையும் அடக்கு முறைக்கு உட்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
ஜெனிவாவில் தோற்றுவிக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் பொறிமுறையில் நம்பிக்கை கொண்டு சித்திரவதைக் கூடமாக மாறியுள்ள இன் நாட்டின் நிறுவனங்கள் சீரமைக்கப்பட  தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை எடுத்துக்கூற முன்வந்துள்ளார்கள். ஜெனிவா தீர்மானம் 30ஃ1 சித்திரவதைக் குற்றங்களும் பொது மக்களுக்கு  விளைவித்த சட்டத்திற்கு முரணான கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுக்கிறது. உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் பொது மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களாகவே உள்ளார்கள். சம்பவம் நடந்து 20 வருடங்களுக்கு பின் விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட குமாரபுரம் கிராமத்தில் நடந்த படுகொலைகளும், பாராளுமன்ற உறுப்பினரான திரு ரவிராஜ் அவர்களுடைய கொலை வழக்கிலும், குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டமை இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பொது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.
எனவேதான் உள்ளகப் பொறிமுறையை நம்பத்தகுந்ததாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு மிக அவசியமாகின்றது.
    வெளிநாட்டு நீதிபதிகளுடைய பங்களிப்பு இல்லாத ஒரு பொறிமுறையில் பங்கெடுப்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை என்பதை தெளிவாகவும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
5. காணி மீள் குடியமர்வு பற்றிய விடயங்கள்.
நடந்தேறிய யுத்தம் தமிழ் மக்களினால் தங்களுடைய தாயகத்தை பாதுகாக்கவே நடந்தது. சுதந்திர காலத்திலிருந்து தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் பல வழிகளினால் பெரும் பான்மை சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இயற்கையான மக்களுடைய இடம்பெயர்வுக்கு அப்பால் அரச அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட பல சிக்களக் குடியேற்றங்களின் ஊடாக இன பரம்பல் மாற்றமடையப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாதிக்;கப்பட்ட மக்கள் காணிக்காகவும் பாரபட்சத்தின் விளைவாகவும் தங்கள் இருப்பிடங்களை பாதுகாக்க ஆயுதம் எந்தினார்கள்.
2009 யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவழிகளிலும் காணி அபகரிப்பு முன்னேடுக்கப்படுகிறது. புராதனகால சிங்கள பௌத்த குடியோற்றங்கள் இருந்த இடம் என்று தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தாலும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் வனப்பிரதேசம் என்று வனபாதுகாப்பு மையத்தாலும், அபிவிருத்தி உல்லாசப்பணயத் தேவைகள்  என்று காணிகள் சுகிகரிக்கப்பட்டு உள்ளுர் மக்களின் மீன் பிடியும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதுகாப்புத் தேவை என்றும், புத்த விகாரைகளுக்கு என்றும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்;கள் இன்னும்  மீள் குடியமர்த்தப்பாடத நிலையில் இவ்வாறன காணி அபகரிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் கிராமத்திற்கே உரித்தான வீடு, தொழில், சுற்றாடல், பாடசாலை, வைத்தியசாலை போன்ற  வசதிகள் அற்று அல்லலுறுகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் நிலைமாறு காலநீதியின் விதிகளைப் பின்பற்றிய இழப்பீடுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அரசாங்கம் பயணிக்கின்றது. இதன் விளைவுதான் இழப்பீடு பற்றிய அலுவலகம் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது.
எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எங்களது தாயகம் பாதுகாக்கப்படவும் சிறுபான்மை மக்களாகிய நாங்கள் இதில் உரிமைகளுடன் வாழ உத்தரவாதம் அளிக்கப்படவும்  வேண்டுகிறோம்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பற்றி அறிந்து கொள்ள வந்த ஐ. நா. வின் விசேட நிபுணரின் அறிக்கை மனித உரிமைப் பேரவையில் எங்கள் சார்பாக குரல் கொடுக்குமென நம்புகிறோம்.
முடிவுரை
ஜெனிவாத் தீர்மானம் 30ஃ1 நிலைமாறு கால நீதியை மையப்படுத்தி பொறுப்புக் கூறலுக்கும் மீள் இணக்கத்திற்குமான பல பொறிமுறைகளையும் சிபாரிசுகளையும் முன் வைக்கின்றது. இவற்றில் இன்னும் எத்தனையோ நடைமுறைக்கு வரவில்லை.
இலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செய்திருக்க வேண்டிய சில முக்கியமான அம்சங்களையே இங்கு வலியுறுத்தியுள்ளோம்.
22.03.2017 அன்று நீங்கள் சமர்பிக்கவுள்ள எழுத்தினாலான அறிக்கையில் நாங்கள் எடுத்தியம்பிய இவ் விடயங்களுக்கு இடமிருக்குமென நம்புகிறோம். மனித உரிமைப் பேரவையில் எங்களுக்காக குரல் கொடுத்துப் பேச வேண்டி நிற்கிறோம்;.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்