சமஷ்டிக்கு அப்பால் செல்லத் தயாரானது சந்திரிகா அரசு! – பீரிஸே குழப்பியடித்தார் என்றார் ராஜித

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டமானது, பீரிஸின் தலையீட்டினாலேயே குழம்பிபோனது என்று அமைச்சரவை  இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
கேள்விநேரத்தின்போது, “அதிகாரப் பகிர்வு தொடர்பில் சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்துக்கு ஒப்பான வகையிலான ஏற்பாடுகளா புதிய அரசமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும்” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அன்று முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்துக்கும் உத்தேச திட்டத்துக்குமிடையில் வித்தியாசம் இருக்கின்றது.
சமஷ்டிக்கு அப்பால் செல்லும் வகையிலான தீர்வுத் திட்டமே சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் முன்மொழியப்பட்டது. அதாவது சோவியத் ஒன்றியம் போன்று ஒன்றிய ஆட்சி முறையாக அது இருந்தது. அதற்கு நானும் ஆதரவு வெளியிட்டேன். சர்வதேச சமூகமும் இணங்கியிருந்தது.
ஆனால், இந்த யோசனையுடன் சேர்ந்து, சந்திரிகா அம்மையாரின் பதவிக் காலத்தையும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலான சரத்தையும் பேராசிரியர் பீரிஸ் முன்வைத்தார். இதற்கே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த விடயத்தாலேயே எல்லாம் குழம்பிப்போனது. பீரிஸின் தேவைக்காகவே அப்படியொரு சரத்துக் கொண்டுவரப்பட்டது. அது சந்திரிகாவுக்குகூடத் தெரியாது” –  என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்