முதலமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரித்தானியா விஜயம்!

இலங்கையின் முதலமைச்சர்கள், முன்னாள் மாநகர முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் அடங்கிய குழுவொன்று நாளை மறுதினம் வியாழக்கிழமை (26) பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உள்ளூராட்சி ஆளுகை தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டே இக்குழுவினர் அங்கு செல்கின்றனர்.
சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையமும், லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்விற்கு இலங்கைக்கான ஒருங்கிணைப்பினை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளதாக பயணக்குழுவில் இடம்பெற்றுள்ள அந்த சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்றங்களின் கொள்கைகள், அம்மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான தொடர்புகள், நல்லாட்சியின் தத்துவங்கள், கொள்கைகள் என்பன தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் பிரித்தானிய நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம், விடுதலை, நீதி, சமாதானம், பொறுப்புக்கூறலும் சமத்துவமும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பன குறித்து இத்தூதுக்குழுவினர் அறிந்து கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புகின்ற பாதையின் ஒரு பகுதியாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் சார்ந்த இலங்கையர்களை சந்தித்து இலங்கையின் அபிவிருத்திக்கு அவர்களது ஆக்கபூர்வமான பங்களிப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பிலான சந்திபுகளும், கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் மேலும் தெரிவித்தார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்