இந்த ஸ்மார்ட்போனை சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம் (video)

இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் நனைந்தாலும், சில விநாடிகளில் இருந்து நிமிடங்கள் வரை தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது.

ஆனால், கியோசிரா எனும் ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன்களையே மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் நனைந்தால் பாழாகாது என்பதோடு வெந்நீர் மற்றும் சோப்பு கட்டிகள் மூலம் பாதிக்கப்படாத வகையில் கியோசிராவின் ரஃபேர் (Kyocera Rafre) ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கியோசிரா ரஃபேர் ஸ்மார்ட்போனின் தொடுதிரையை ஈரமான கைகளை கொண்டும், கையுறை அணிந்து கொண்டும் பயன்படுத்த முடியும். சமையலறை கருப்பொருள் (Theme) சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் சமையல் ஆப் ஒன்று இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கை சைகை மூலமாகவும் இயக்க முடியும்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை கியோசிரா ரஃபேர் 5.0 இன்ச் திரை, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான ஸ்பீக்கர் வழங்கப்படவில்லை.

மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் வழக்கமான ஸ்பீக்கர்கள் இல்லாததால் வாட்டர் ப்ரூஃப் திறன் வசதி மேலும் சிறப்பாக இருக்கிறது. ஸ்பீக்கர் இல்லாததால் ஸ்மார்ட் சோனிக் ரிசீவர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சத்தத்தை அதிர்வுகளாக பிரதிபலிக்கும். இதே போன்ற தொழில்நுட்பம் Mi Mix சாதனத்திலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் உலகின் முதல் சோப்-ரெசிஸ்டண்ட் போனாக இது அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை அனைத்துவித சோப்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்