ஒரு ஆண் பிள்ளை வீண் பிள்ளையாகிறான்!!

புறொய்லர் கோழி போல்
புள்ள வளர்க்கின்றார்
சிறையில் இருப்பது போல்
செல்லம் அழுகின்றான்

மண்ணில் இறங்காதே
மாங்காய் தின்னாதே
தண்ணியை ஊற்றாதே
தரையில் எழுதாதே

சுவரிலே கீறினால்
சுவரா அடிப்பேன்
அவருட போண் எடுத்தா
அதற்கும் அடிப்பேன்.

எதையும் செய்வதென்றால்
என்னிடம் கேட்டுச் செய்
உதை விழும் உனக்கு நல்லா
ஊத்தைல விளையாடப் போனால்

நடக்கப் பழகியதும்
நாலு டியுஷன் போகனும்
மடக்கை வாய்ப்பாட்டை
மளமளண்னு சொல்லனும்

எத்தனை கட்டளைகள்
இறகு ஒடிப்புக்கள்
அத்தனையும் இறுதியிலே
அவஸ்தையில் தள்ளி விடும்

தடை போட்டு தடை போட்டு
தன் பிள்ளை வளர்க்கிறார்
கடைசியில் பிள்ளை வளர்ந்து
காட்சி பொம்மை ஆகின்றான்.

மாய்ந்து  சுத்தம் பேணி
மம்மிமார் வளர்த்த பிள்ளை
நோய் எதிர்ப்பு சக்தி இன்றி
நொந்து வாடுகிறான்.

உருவாகும் வயதில்
உம்மாக்கு நடுங்கியவன்
பெரியாளாகி பின்னர் அவன்
பெண்டாட்டிக்கு நடுங்குகிறான்.

ஆண் பிள்ளை வளர்ப்பதில்
அளவு மீறிய கண்டிப்பு
வீண் பிள்ளை ஆக்கி விடும்
விவேகமாய் வளர விடுவோம்.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்