தோழர்மார் கதை!!


ஆட்டிப் படைத்த மரம்
‘ஆனை’யும் அடங்கும் மரம்
கிழக்கிலே முளைத்தெழுந்து
கிளர்ச்சிகள் செய்த மரம்.
மரத்தை வளர்ப்பதற்காய்
மாடுபோல் பாடு பட்ட
இளைஞரின் தியாகங்கள்
இப்போது நெனவிருக்கா?

கிறுக்குப் பிடித்தவன்கள்
கிழக்கில பேயாட
பொறுக்க முடியாமல்
பொங்கிய இளைஞர்கள்
நாரே தக்பீர் என
ஊரதிர கோஷமிட்டு
மரத்துக்காய் பாடுபட்டார்
மறக்காமல் நெனவிருக்கா?

ஒரு ஓட்டுப் போட்டா
உதவாது என்று சொல்லி
மறு ஓட்டும் போட
மையை அழிச்சுப் போட்டு
கால் கடுக்க நின்று
கட்சிக்காய் ஓட்டுப் போட்டு
பொலிஸிலே மாட்டுப் பட்ட
இளசுகளை நெனவிருக்கா?

கண்ணாமூச்சி அரசியலில்
கண்ணியமாய் வெல்ல என்று
தொண்ணூறில் பல பெண்கள்
தொடராக நோன்பிருந்தார்.
பாய் விற்ற காசில்
பால்வனம் கரைத்தெடுத்து
கூட்டத்துக்கு வருபவர்க்கு
கொடுத்தாரே நெனவிருக்கா?

ஒரு கட்சி என்றோம்
உரிமையை வெல்ல என்றோம்
பெருங்கட்சிக் காரரையே
பிச்சை கேட்க வைத்தோம்.
பிரதமர் பதவி கூட
பெரியவர் கேட்டிருந்தா
அப்ப இருந்த ஆட்சி
தப்பாமல் தந்திருக்கும்.

அரணாக நின்ற தலை
அரநாயகா சென்று விழ
திறனில்லா மனிதர்களால்
திசைமாறி கட்சி போக
உன் கட்சி உட்பூசல்
என்கட்சி என் உழைப்பு
தனியான கட்சிகளால்
கனவாகின இலட்சியங்கள்.

ஆட்டிப் படைத்த மரம்
‘ஆனை’யும் அடங்கும் மரம்
ஏட்டிக்குப் போட்டிகளால்
இறந்த மரம் ஆயிடுச்சு.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்