ஆஸியில் தஞ்சம் கோரியோர் அச்சமின்றி இலங்கை திரும்பலாம்! – தண்டிக்கமாட்டோம்; மன்னிப்போம் என்கிறார் ரணில் (photo)

“சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்குத் திரும்ப முடியும். அவர்களை நாங்கள் தண்டிக்கமாட்டோம். மன்னித்துவிட்டோம்.”
– இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதமர்  மல்கம் ரேன்புல்லுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைப் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அகதிகள் விடயத்தில் ஐரோப்பா விட்ட தவறுகளை நாங்களும் விடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கான்பரா நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்துப் பேசினார் இலங்கைப் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க. இதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு நடத்தினர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:-
“ஆஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகச் சென்று அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்கள் அனைவரையும் நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் வந்து குவிந்து ஏற்படுத்திய அமளியை நாமும் செய்ய முடியாது. இது குறித்து தற்போதும் ஆஸ்திரேலிய அரசுடன் பேசியவண்ணம் உள்ளோம்.
ஆஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக இலங்கையர் வருவதை நாம் விரும்பவில்லை . அதற்கு ஒரு காரணமுமே இல்லை.
சட்டவிரோதமாக நாட்டை விட்டுச் சென்றிருந்தாலும் இவர்களை மீண்டும் வரவேற்கிறோம் . அவர்களை நாம் தண்டிக்கமாட்டோம். மாறாக உதவி செய்வோம்.
ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அவர்கள் மறக்கக்கூடாது” – என்றார்.
மனுஷ், நவ்று தீவுகளில் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்கள் மனிதாபிமானமாக நடத்தப்படவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், “இலங்கை அகதிகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்பி வரலாம்” என்று பதிலளித்தார்
“எல்லாமே மன்னிக்கப்பட்டு விட்டன. திரும்பி வாருங்கள். காணாமல்போனவர்களுக்காக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஒருபோதுமே போர் இடம்பெறாத பகுதிகளில் இருந்தும் சில அகதிகள் வெளியேறி விட்டார்கள்” என்றும் பிரதமர் ரணில் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்