சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் – ஜனாதிபதி

சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்க கல்விமான்கள் முன்வரவேண்டும் என்றும் கல்விமான்கள் தமது துறைகளுடன் மாத்திரம் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடக்கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கேகாலை வித்தியாலயத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கேகாலை வித்தியாலத்திற்கு வருகைதந்த ஜனாதிபதியை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இப்பாடசாலைக்கு நாட்டின் ஜனாதிபதியொருவர் விஜயம் செய்தது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கல்விமான்கள் தமது அறிவை சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தி சமூகத்தின் நன்மைக்காகச் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று இலவசக் கல்வியின் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்ற காலம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகின் பாராட்டைப் பெற்றுள்ள எமது நாட்டின் இலவசக் கல்வி துறையையும் இலவச சுகாதார துறையையும் மேலும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் தனது பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கேகாலை வித்தியாலயத்தின் மாணவர்களின் கோரிக்கையின் பேரில் அப்பாடசாலையின் மூன்றுமாடிக் கட்டிடத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கேகாலை வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

பாடசாலை மாணவர்களினால் எழுதப்பட்ட 22 நூல்கள் அடங்கிய ஒரு நூற்தொகுதியும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

பாடசாலையில் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கபீர் ஹாசீம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்திரபால, முதலமைச்சர் மஹீபால ஹேரத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் முன்னாள் கடற்படைத்தளபதி தயா சந்தகிரி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயாதுன்ன, பாடசாலை அதிபர் ஜீ ஏ எம் எஸ் சரத்சந்திர உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்