தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படும் என சசிகலா தரப்பினர் தொடர்ந்தும் நம்பிக்கை

தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதற்கான அழைப்பு தமது தரப்பிற்கு விடுக்கப்படும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சசிகலா தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக அதிமுக சார்பில் தமிழக சட்டமன்ற பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட குழுவினர் நேற்று (15) மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்தனர்.

இதன்போது தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு, தமிழக சட்டப் பேரவையின் ஆளுங்கட்சியான அதிமுகவின் 134 உறுப்பினர்களில் 124 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இந்த சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பழனிச்சாமி தரப்பிலுள்ள டி. ஜெயக்குமார், ஆளுநர் நீதியை நிலைநாட்டுவார் என எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அணியினரையும் ஆளுநர் நேற்றிரவு சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற பேரவைக் கூட்டத்தை கூட்டுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஓ பன்னீர்செல்வம் அணியினர், அங்கு தங்களின் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவின் பின்னர், உடனடியாக ஓ. பன்னீர்செல்வம் அந்த பொறுப்புகளை ஏற்று செயற்பட்டுவந்தார்.

இந்த நிலையில், வி.கே. சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தெரிவுசெய்த பின்னர், அவர் முதல்வர் பதவியை ஏற்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில், கடந்த 5 ஆம் திகதி முதல்வர் பொறுப்பிலிருந்து பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார்.

எனினும், 7 ஆம் திகதி ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானத்தில் ஈடுபட்ட பின்னர், சசிகலா தம்மை வற்றுபுறுத்தியதன் பேரிலேயே முதல்வர் பதவியிலிருந்து தாம் விலக நேரிட்டதாக பன்னீர்செல்வம் அறிவித்தல் விடுத்ததை அடுத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை மற்றும் தலா 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட தரப்பினர் பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த பின்னர் அக்ரஹர பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தமிழக ஆட்சியை தீர்மானிப்பதற்கான அறிவித்தலை இன்று விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்