மேலும் விரிவடைந்துள்ளது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்! (photos)

படையினர் வசமுள்ள தமது சொந்த மண்ணை மீட்பதற்காக அறவழிப் போரைத் தொடுத்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் மேலும் விரிவடைந்துள்ளது. இதுவரை மூன்று தகரக் கொட்டில்களின் கீழ் இருந்து போராடிய மக்கள் புதிதாக இரண்டு கூடாரங்களை அமைத்துத் தமது போராட்டக் களத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.
விமானப் படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 18ஆவது நாளாகவும் போராட்டம் நடத்துகின்றனர். வாக்குறுதிகள் எதனையும் ஏற்கப் போவதில்லை என்றும், காணிக்குள் கால்வைப்பது மாத்திரமே தீர்வு என்பதிலும் உறுதியாக இருந்து அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். மக்கள் விடுதலை முன்னணியினரும் மக்களைச் சந்தித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்புச் செய்யப்போவதாக அவர்கள் மக்களிடம் தெரிவித்தனர்.
இதுவரையில் 10 அடியில் மூன்று தகரக் கொட்டில்கள் மாத்திரம் போடப்பட்டிருந்தன. தற்போது அதனுடன் இணைந்ததாக தறப்பாள் பத்தி இறக்கப்பட்டது. மேலும், 20 அடியில் தகரக் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் உள்ள பாடசாலை         மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக புதிய தகரக் கொட்டில் பயன்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்