தொடர்கின்றது புதுக்குடியிருப்பு மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்! (photos)

இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலத்தை மீட்பதற்கான புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை    திடீரென மயக்கமடைந்தார். இதனால் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவரின் உதவியுடன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் நில மீட்புக்காகப் போராடி வரும் மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை சுழற்சி முறையில் ஆரம்பித்தனர். முதல்கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை 3 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை  ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒருவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மருத்துவர் போராட்டக்களத்துக்கு வந்தார். அவரைப் பரிசோதித்தார்.
இதன் பின்னர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏனைய இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தார்.
போராட்டக்காரர்களின் உடலில் குளுக்கோசின் அளவு குறைந்துள்ளதுடன், குருதி அமுக்கமும் குறைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து வேறு மூவர் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலம் விடுவிக்கும் வரையில்  சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் போராட்டம் தொடரும் என்று புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன் ஆகியோர் இந்த நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுக்குடியிருப்பு மக்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்