தீர்வு கிடைக்காவிடின் வடக்கு முழுவதும் திங்கள் முதல் போராட்டங்கள் வெடிக்கும்!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முல்லைத்தீவு மாவட்ட  மக்களின் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் திங்கட்கிழமை தொடக்கம் பெரும் எடுப்பிலான ஆதரவுப் போராட் டங்கள் கட்டம் கட்டமாக நடத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு, பொதுமக்களின் கவனயீர்ப்பு, வாகனப் பேரணி, முழு அடைப்புப் போராட்டம் என் பன நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், திருமதி சாந்தி சிறீஸ்கந் தராசா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலருடன் முதலில் இடம்பெற்ற கலந்துரையாடலில், “காணி விடுவிப்புக்காக சாத்தியம் எந்த அளவில் உள்ளது? இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது?” என்று மக்கள் பிரதிநிதிகள் மாவட்டச் செயலருடன் பேசினர்.
இதன்போது, காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் தொடர் போராட்டம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
20ஆம் திகதி திங்கட்கிழமை, வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பில் ஈடுபடுவர். 22ஆம் திகதி புதன்கிழமை வடக்கின் 5 மாவட்டங்களிலும், மாவட்ட செயலகம் முன்பாக காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும். 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் இளையோர் மோட்டார் சைக்கிளில் கறுப்புக் கொடி கட்டியவாறு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பை நோக்கி வருவார்கள். இதன் பின்னர் 27ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் முழுவதிலும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான இறுதி அறிவிப்பு நாளை சனிக் கிழமை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்